கரூர் விவகாரம்: அரசு நெய்யில் ஸ்வீட் செய்யாதீங்க.. விஜய்யை அவர் பாணியிலேயே அட்டாக் செய்த கிருஷ்ணசாமி

  • சென்னை: நாளை கரூரில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை முதல்வர் விஜய் ரத்து செய்ய வேண்டும் என்றும், அரசு நெய்யில் 'ஸ்வீட்' செய்யக்கூடாது எனவும் அவர் பாணியிலேயே புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த சிபிஎம் கட்சியும் கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்குவது சரியாக இருக்காது என கூறியிருந்தது.

    Advertisement

    கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பரில் தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த சூழலில் தற்போது முதல்வர் ஆகியுள்ள தவெக தலைவர் விஜய் கரூரில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கப் போவதாக அறிவித்து இருந்தார்.

    Advertisement

    ஊரான் வீட்டு நெய்யில்..

    நாளை கரூர் செல்லும் விஜய் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான ஆணையை வழங்க உள்ளார். விஜய்யின் இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கரூர் வழக்கு நடந்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு அரசு வேலை வழங்குவது சரியாக இருக்காது என விமர்சித்து வருகின்றனர். விஜய் ஆட்சி அமைக்க உதவிய சிபிஎம் கட்சியும் விஜய் அரசின் முடிவு தவறானது என விமர்சித்து இருந்தது. இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி, அரசு நெய்யில் 'ஸ்வீட்' செய்யக்கூடாது என விஜய்யின் பாணியிலேயே விமர்சித்துள்ளார்.

    Advertisement

    தேர்தலுக்கு முன்பாக பிரசாரத்தில் பேசிய விஜய், கருணாநிதிக்கு சிலை வைக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி பேசியிருந்தார். மக்களுடைய பணத்தில் யாருக்கு புகழ் பாட நினைக்கிறீங்க என்று உச்ச நீதிமன்றம் கேட்டதாகவும், இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? ஊரான் வீட்டு நெய்யில் உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க என்று அர்த்தம்.

    விஜய்யின் டயலாக்கை எடுத்து விமர்சனம்

    மக்களுடைய அடிப்படை வசதிகளுக்கு செலவு செய்ய நிதிச்சுமை என்று சொல்கிறீர்கள். சிலை வைக்க எங்கே இருந்து காசு வருகிறது" என்று பேசியிருந்தார். விஜய்யின் இதே டயலாக்கை எடுத்து, கரூர் விவகாரத்தில் தவெக அரசை கிருஷ்ணசாமி காட்டமாக சாடியுள்ளார். இது குறித்து கிருஷ்ணசாமி கூறியிருப்பதாவது:-

    Advertisement

    நாளை கரூரில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை முதல்வர் விஜய் அவர்கள் ரத்து செய்ய வேண்டும்! அரசு நெய்யில் 'ஸ்வீட்' செய்யக்கூடாது!.. 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடந்த விஜய் அவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தார்கள். அதற்கான காரணம் என்ன? இது திட்டமிட்டு நடந்த செயலா? அல்லது விபத்தா? ஏறக்குறைய ஒரு வருடமாகியும் அதற்கான விடை இதுவரை கிடைக்கவில்லை. இந்த நிகழ்வு குறித்து கரூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    நீதி கிடைக்காமல் போய்விடும்

    காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த ஆணையம் கலைக்கப்பட்டு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவரின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜூனா உட்படப் பலரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முக்கியச் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    Advertisement

    இந்நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை தந்திடவும், அந்த ஆணையை விஜய் அவர்களே நேரடியாக வழங்கிடவும் நாளை (10.07.2026) அன்று அவர் கரூர் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே த.வெ.க சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது. முக்கியச் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள அந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை கொடுக்கப்பட்டால், அவர்களால் நேர்மையான சாட்சியங்களை வழங்க முடியாது.

    அவர்கள் அனைவரும் பிறழ் சாட்சிகளாக மாறிவிடுவார்கள். அதனால் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடலாம்; 41 பேரின் மரணத்திற்கு நீதி கிடைக்காமலும் போய்விடும். எனவே, நாளை கரூரில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை விஜய் அவர்கள் ரத்து செய்ய வேண்டும் எனப் புதிய தமிழகம் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    English Summary

    Krishnasamy, Puthiya Tamilagam leader urged Chief Minister Vijay to cancel the proposed government job distribution event for families of those who died in the Karur tragedy. He also criticised the government, using Vijay's own phrase about not making "sweets in government ghee."