எல்.முருகனுக்கு கட் அவுட்டு.. நயினாருக்கு கெட் அவுட்டா?பரபரப்பான பாஜக.. கலங்கிப் போன கமலாலயம்!

  • சென்னை: மத்திய இணை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான எல்.முருகன். இந்த நிலையில் முருகனின் செயல்பாடுகள் சரியில்லாததால் மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது அவர் விடுவிக்கப்படலாம் என்ற தகவலின் காரணமாகவே பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தமிழக பாஜக தலைவர் பதவியை குறிவைத்து எல்.முருகன் தலைமையிடம் பேசிய நிலையில், அதற்கும் நயினார் நாகேந்திரன் முட்டுக்கட்டை போட்டதாக சொல்கின்றனர்.

    Advertisement

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை, கால்நடைத்துறை உள்ளிட்ட பல்வேறு இலாகாக்களை கவனித்து வந்தவர் எல்.முருகன். இந்த நிலையில் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதோடு, எம்பி பதவியை ராஜினாமா செய்ய அனுமதிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    Advertisement

    2030ம் ஆண்டு வரை அவரது ராஜ்ய சபா எம்பி பதவிக்காலம் இருந்த நிலையில் அவரது திடீர் முடிவு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக பாஜக வட்டாரங்களில் முருகனின் திடீர் ராஜினாமா பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது.

    2029 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தமிழக பாஜகவை வலுப்படுத்த முழு நேரம் பணியாற்ற போகிறேன் என எல்.முருகன் கூறியுள்ளார். இதனால் தான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் விளக்கம் அளித்திருக்கிறார். ஆனால் அவர் ராஜினாமாவுக்கு பின்னால் வேறு சில அரசியல் காரணங்கள் இருக்கலாம் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

    Advertisement

    தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2021ம் ஆண்டு ஜூலை மாதம் வரை பதவி வகித்தார். அப்போது கட்சியை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லும் முயற்சியிலும் ஈடுபட்டார். குறிப்பாக, 2020ம் ஆண்டு முருகன் நடத்திய பாஜக நடத்திய வேல் யாத்திரை அவருக்கு ப்ளஸ் பாய்ண்டாக அமைந்தது.

    அப்போது புதிதாக கட்சிக்குள் வந்த அண்ணாமலை தமிழக பாஜகவின் துணைத் தலைவராக இருந்தார். 2021 சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்த நிலையில் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக பதவி ஏற்று கொண்டார். பின்னர் வேறு சில காரணங்களால் அண்ணாமலையும் அந்த பதவியில் இருந்து நீக்கபப்ட்டார்.

    Advertisement

    இதற்கிடையே அப்போது மத்திய அமைச்சராக இருந்த எல்.முருகன் மீண்டும் தமிழக பாஜக தலைவர் பதவியை பெற விரும்பியதாக சொல்லப்படுகிறது. ஆனால் தேசிய தலைமை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதை அடுத்து நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே எல்.முருகன் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தலைவர் பதவிக்கு குறி வைக்கும் தகவலை தெரிந்து கொண்ட நயினார் நாகேந்திரன் தனது டெல்லியில் அபி மூலம் அதனை தடுத்துவிட்டார் என்கின்றனர்.

    மேலும் ஆளுநர் பதவியை குறிவைத்து எல்.முருகன் சில காய்களை நகர்த்தி நிலையில், சமீபத்தில் வெளியான ஆளுநர் நியமன பட்டியலிலும் அவர் பெயர் இல்லை. ஏற்கனவே மத்திய அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல் வெளியான நிலையில் முருகன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டாரங்களில் தகவல் கசிந்தது. இதை கருத்தில் கொண்டு தானாகவே ராஜினாமா செய்து விட்டார் எல்.முருகன் என ஒரு குரூப் சொல்லி வருகிறது.

    Advertisement

    இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக பதவியேற்க எல்.முருகன் சில காய்களை நகர்த்தி நிலையில் அதற்கு பாஜக தலைமை முட்டுக்கட்டை போட்டுள்ளது. ஏற்கனவே எல்.முருகன் சமுதாயத்தைச் சேர்ந்த வெங்கடேசன் பாஜக தேசிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரே சமூகத்தை சேர்ந்த இருவருக்கு மாநில அளவில் முக்கிய பொறுப்புகள் வழங்க முடியாது என பாஜக கூறிவிட்டதாம். மேலும் தமிழக பாஜகவில் சிலர் மத்திய அமைச்சர்களாகவும் மாநில தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் மாநில தலைவர் பதவிக்காக ராஜினாமா செய்து விட்டார் என்ற எல்.முருகனின் வாரத்தை ஏற்க முடியாது என சொல்லி விட்டார்களாம்.

    Advertisement

    அதே நேரத்தில் எல். முருகனுக்கு நெருக்கமானவர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு வாதங்களை முன்வைத்து வருகின்றனர். பல ஆண்டுகள் கட்சிக்காக பணியாற்றி இருக்கிறார் எல்.முருகன். எனவே, அவரது பணிகளை நிச்சயம் தேசிய தலைமை அங்கீகரிக்கும். எதிர்காலத்தில் அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பும் அல்லது ஆளுநர் பதவியும் வழங்கப்படலாம் என சொல்கின்றனர்.

    அதே நேரத்தில் தொடர் தோல்விகளால் தான் எல்.முருகன் மீது தமிழக பாஜக மட்டுமல்ல தேசிய தலைமை அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் நீலகிரியில் ராசாவிடம் தோற்றார் எல்.முருகன். மேலும் 2026 சட்டசபை தேர்தலில் அவிநாசி தொகுதியிலும் அதற்கு முன்னர் நடந்த தேர்தலில் தாராபுரம் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். இப்படி எல்.முருகன் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோற்ற நிலையில் தான் அவரால் இனி கட்சிக்கு பயனிலை என்பதால் கட்சி அவரை ஒரம் கட்டி விட்டதாக சொல்கின்றனர்.

    English Summary

    L Murugan’s resignation has sparked speculation over his bid for the Tamil Nadu BJP chief post, alleged leadership resistance and possible Cabinet reshuffle.