விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா?

  • தமிழக முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பொறுப்பேற்ற குறுகிய நாட்களிலேயே எல்&டி நிறுவனத்துடன் கையெழுத்தான 18,600 கோடி ரூபாய் மெகா முதலீட்டு ஒப்பந்தம் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

    Advertisement

    குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட டேட்டா சென்டர் (தரவு மையம்) விரிவாக்கத் திட்டம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஒருபுறம் இந்தத் திட்டம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும், மறுபுறம் தமிழக அரசின் இந்த இரட்டை நிலைப் பாட்டைச் சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் இணையத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

    Advertisement

    பரந்தூருக்கு 'நோ'.. டேட்டா சென்டருக்கு 'எஸ்'..

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவிருந்த பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தை, விவசாய நிலங்கள் அழியும் மற்றும் அப்பகுதியின் நீர் வளம் கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறி விஜய் தலைமையிலான அரசு தொடக்கத்தில் இருந்தே கடுமையாக எதிர்த்து வந்தது. விவசாய நிலங்களையும் இயற்கை நீர் ஆதாரங்களையும் பாதுகாப்பதே தங்களின் முதன்மைக் கொள்கை என்று அறிவித்த தவெக அரசு, தற்போது அதே காஞ்சிபுரம் மாவட்டத்தில் மெகா டேட்டா சென்டர் விரிவாக்கத்திற்கு எந்தவித நிபந்தனையுமின்றி ஒப்புதல் அளித்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    "விமான நிலையத்துக்கு வந்தா விவசாயம் அழியும்... டேட்டா சென்டர் வந்தா தக்காளி விளையுமா? காஞ்சிபுரத்தில் விஜய் அரசின் இரட்டை நிலைப்பாடு ஏன்?", "காஞ்சிபுரத்துல டேட்டா சென்டரா... அப்போ நீர் ஆதாரத்தையெல்லாம் பாதுகாப்போம்னு சொன்னது என்ன ஆச்சு?" என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

    லோக்கல் ரியாலிட்டி: 90 மெகாவாட்டில் இருந்து 15,000 கோடியாக உயர்ந்த எல்&டி தரவு மையம்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் எல்&டி நிறுவனத்தின் இந்த டேட்டா சென்டர் மையம் கடந்த 2024 ஆம் ஆண்டிலேயே அமைக்கத் திட்டமிடப்பட்டு தற்போது முழுமையான பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தொடக்கத்தில் வெறும் 90 மெகாவாட் (MW) மின் நுகர்வுத் திறன் கொண்ட சிறிய மையமாக இது திட்டமிடப்பட்டிருந்த சூழலில், தற்போது புதிய அரசின் ஒப்புதலோடு 15,000 கோடி ரூபாய் முதலீட்டில் இது ஒரு மாபெரும் சர்வதேச தரவு மைய மையமாக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இவ்வளவு இமாலயத் தொகையைத் தமிழக அரசு காஞ்சிபுரத்திற்குள் அனுமதித்திருந்தாலும், இந்த ஒட்டுமொத்த விரிவாக்கத்தின் மூலம் கிடைக்கப்போகும் கூடுதல் வேலைவாய்ப்புகள் வெறும் 500 பேருக்கு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    தண்ணீரை உறிஞ்சும் ராட்சத இயந்திரங்கள்

    பரந்தூர் பகுதியில் நீர்நிலைகளைக் காப்போம் என்று கூறிய புதிய அரசு, டேட்டா சென்டர்களால் ஏற்படப்போகும் நிலத்தடி நீர் இழப்பைப் பற்றி ஏன் கண்டுக்கொள்ளவில்லை. ஒரு நடுத்தர அளவிலான டேட்டா சென்டர் தங்களின் லட்சக்கணக்கான சர்வர் இயந்திரங்களை 24 மணி நேரமும் தடையின்றிக் குளிர்விக்க (Cooling system) தினசரி பல லட்சம் லிட்டர் நன்னீரை உறிஞ்சுகின்றன.

    உலக அளவில் சுற்றுச்சூழல் ஆய்வுகள் எச்சரிப்பது போல, இந்தத் தரவு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் செல்வதோடு, சுற்றியுள்ள விவசாயக் கிணறுகளும் வறண்டு போகும் ஆபத்து உள்ளது.

    Advertisement

    2 டிகிரி உயரும் உள்ளூர் வெப்பநிலை

    டேட்டா சென்டர்களில் உள்ள அதிநவீன சூப்பர் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் தொடர்ந்து இயங்கும்போது வெளியிடும் அதீத வெப்பத்தின் காரணமாக, அந்தத் தரவு மையங்கள் அமைந்துள்ள குறிப்பிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளூர் வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உயர்வதாகப் பல்வேறு சர்வதேச அறிவியல் ஆய்வுகள் ஆதாரங்களுடன் எச்சரிக்கின்றன.

    English Summary

    The Tamil Nadu government’s swift approval for L&T’s massive ₹15,000 crore data centre project in Kanchipuram has triggered sharp criticism. Netizens are questioning why environmental and farmland concerns raised against the Parandur airport were overlooked here, especially given the project’s high water and power consumption for just 500 jobs.