“வெறும் தீர்மானம் வேஸ்ட்.. தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் சட்டம் இயற்ற வேண்டும் - ரகுபதி பேட்டி

  • சென்னை: "தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் சட்டப்பூர்வ அங்கீகாரம் வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கட்டாயமாக்க சட்டம் இயற்ற வேண்டும். தவெக அரசின் தீர்மானம் ஆளுநரையோ, மத்திய அரசையோ கட்டுப்படுத்தாது" என திமுக முன்னாள் ரகுபதி தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழக சட்டசபை விடுமுறைக்கு பின் இன்று கூடியது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றம் அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

    Advertisement

    இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக தி.மு.க எம்.எல்.ஏ கோவி. செழியன் பேசுகையில், "சட்டசபையில் முதலமைச்சர் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானத்திற்கு தி.மு.க ஆதரவு அளிக்கிறது. தமிழ்தாய் வாழ்த்திற்கு 3ஆம் இடம் என்று சொல்லும்போது அவமானமாக இருக்கிறது.

    தமிழ் மொழியை தேசிய மொழியாக்கி செம்மொழியாக்கியவர் கலைஞர் கருணாநிதி. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அரசு அலுவலகங்களில் பாட அரசாணை வெளியிட்டவர் கலைஞர். தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றியவர் பெயரிலான பல்கலைக்கழகத்தில்ல் தமிழ்த்தாய் வாழ்த்து 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது வேதனை. தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில சட்டம் இயற்ற வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Advertisement

    இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, "தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கட்டாயமாக்க வேண்டும் என்ற தீர்மானத்தை இன்று தவெக அரசு நிறைவேற்றியுள்ளது. எல்லா நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடவேண்டும், தங்களது சொந்தக் குரலிலேயே பாட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது உத்தரவிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

    இன்றைக்கு தவெக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானம் ஆளுநரையோ, மத்திய அரசையோ கட்டுப்படுத்துமா என்பது சந்தேகம் தான். ஒரு மசோதாவைக் கொண்டு வந்து சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தால் தான் இது நிலைத்து நிற்க முடியும். மத்திய அரசு என்று உச்சரிக்கவே பயப்படுகிறது இந்த தவெக அரசு.

    Advertisement

    வெறும் தீர்மானத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. சபாநாயகருக்கு வேண்டுமானால் தீர்மானம் போதுமானதாக இருக்கலாம். எங்களைப் பொறுத்தவரி தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை வேண்டும். அதற்காகவே நாங்கள் சட்டப்பூர்வ அங்கீகாரம் கேட்கிறோம். சட்ட அங்கீகாரம் இல்லாவிட்டால் ஆளுநர் போன்றவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை 3வது இடத்துக்குத் தள்ளி விடுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    “Legal recognition is required regarding the ‘Tamil Thai Vazhthu’ issue. Legislation must be enacted to make the singing of the ‘Tamil Thai Vazhthu’ mandatory. The TVK government’s resolution will not bind the Governor or the Central Government,” stated former DMK leader Regupathy.