ரோஸு ரோஸு..குட்டையை குழப்பி விட்ட லீமா! வெறுப்பான விஜய்! எஸ்பிவி - சண்முகம் டீமுக்குள் வெடித்த மோதல்

  • சென்னை: தமிழக அரசியலில் தற்போது மிக அதிகமாக பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது அதிமுக பிளவும், அதனைத் தொடர்ந்து உருவாகியுள்ள அமைச்சரவை விரிவாக்க குழப்பமும் தான். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவளித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்ற கேள்வியே அரசியல் வட்டாரங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்களால் ஏற்பட்ட குழப்பத்தால் தான் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் நடக்கவில்லை எனவும், இதற்கு பின்னணியில் லீமா ரோஸ் இருப்பதாகச் சொல்கின்றனர் அதிமுகவினர்.

    Advertisement

    சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியின் எதிர்ப்பை மீறி 25 அதிமுக எம்எல்ஏக்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த திடீர் ஆதரவு, அரசியல் ரீதியாக மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்பட்டது.

    Advertisement

    அதிமுகவில் இருந்து சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தனி அணியாக செயல்படத் தொடங்கியதும் தமிழக அரசியலை மேலும், பரபரப்பாக்கியது. அந்த நேரத்திலேயே, "விஜய் அரசுக்கு ஆதரவு அளித்த அதிமுக தரப்பினருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும்" என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவின.

    விஜய் அமைச்சரவை

    குறிப்பாக, சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன், இசக்கி சுப்பையா உள்ளிட்டோரின் பெயர்கள் அமைச்சரவை பட்டியலில் அடிபட்டது. ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. அமைச்சரவை விரிவாக்கத்தை விஜய் தரப்பு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும், அதிமுக எம்எல்ஏக்களுக்கு உடனடியாக அமைச்சர் பதவி வழங்குவதில் தயக்கம் காட்டுதாகவும் தவெக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    Advertisement

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

    இதற்குப் பின்னால் பல முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் மீது ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணைகள் நிலுவையில் உள்ளன. இத்தகைய சூழலில் அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கினால், "தூய அரசியல்", "ஊழலற்ற ஆட்சி" என்ற அடையாளத்தை உருவாக்க முயற்சி செய்து வரும் தவெக அரசுக்கு எதிராக விமர்சனங்கள் எழலாம் என்ற அச்சம் கட்சிக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.

    அமைச்சரவை விரிவாக்கம்

    விஜய்யின் நெருக்கமான அரசியல் ஆலோசகர்கள் சிலரும் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. "அதிமுக முன்னாள் அமைச்சர்களை நேரடியாக அமைச்சரவைக்குள் கொண்டு வந்தால், எதிர்காலத்தில் ஏற்படும் சட்ட மற்றும் அரசியல் சிக்கல்கள் தவெக அரசையும் பாதிக்கலாம்" என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் அமைச்சரவை விரிவாக்கத்தில் தாமதம் ஏற்படுகிறது என்றும், தற்போது மிக கவனமாக அரசியல் கணக்கீடு நடந்து வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகின்றன.

    Advertisement

    லீமா ரோஸ்

    இதற்கிடையே லால்குடி தொகுதி எம்எல்ஏ லீமா ரோஸ் பெயரும் இந்த விவகாரத்தில் அதிகமாக பேசப்படுகிறது. அதிமுக தரப்புக்கும் தவெக தரப்புக்கும் இடையே பாலமாக செயல்பட்டவர் லீமா ரோஸ்தான் என்ற தகவல்கள் ஏற்கனவே பரவியிருந்தன. இப்போது, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே சில அதிமுக எம்எல்ஏக்களிடம் "அமைச்சரவை வாய்ப்பு கிடைக்கும்" என்ற வகையில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    அதிமுக

    ஆனால் இந்த தகவல்கள் குறித்து எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்பாடும் வெளியாகவில்லை. இருப்பினும், "விஜய்க்கு தெரியாமல் சில அரசியல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதா?" என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த சூழ்நிலை காரணமாக, விஜய் தரப்பு தற்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறது என கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து ஆதரவு அளித்த அணியை முழுமையாக நம்பலாமா? அல்லது வெளிப்புற ஆதரவாக வைத்திருக்கலாமா? என்ற விவாதமும் தவெகவில் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    அதிமுக பிளவு

    மறுபுறம், அமைச்சரவை பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அதிமுக ஆதரவு அணிக்குள் ஏமாற்ற மனநிலை உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, "அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நகர்வு என்ன?" என்ற கேள்வி அந்த அணிக்குள்ளேயே எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால், தற்போது அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிளவு இன்னொரு விளவை உருவாக்குமா? அல்லது விஜய் தரப்பு அமைச்சர் பதவி வழங்குமா? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் அதிகரித்துள்ளது.

    English Summary

    AIADMK rebel camp faces fresh tension as Vijay delays cabinet expansion amid political and corruption concerns.