கூட்டணியில் இருக்கும்போதே இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது புதுசா? இதற்கு முன்பு எப்போ நடந்தது?

  • சென்னை: தவெக அரசுக்கு இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வந்த நிலையில், நடைபெற இருக்கும் 2 தொகுதி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு இல்லை என அறிவித்துள்ளன. எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்காமல் தலா 1 தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முடிவு செய்துள்ளன.

    Advertisement

    தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரு கட்சி கூட்டணியில் இருந்துகொண்டே இடைத்தேர்தலில் மட்டும் ஆளும் கட்சிக்கு எதிராகத் தனித்து போட்டியிடுவது அல்லது கூட்டணி மாறிக் களம் காண்பது புதிதல்ல.. இப்படி பலமுறை நடந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக உடன் கூட்டணியில் இல்லை என்றாலும், தவெக அரசு அமைய வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன.

    Advertisement

    பொதுவாக இடைத்தேர்தல்கள் ஆளும் கட்சியின் பலத்தை நிரூபிக்கும் களமாகப் பார்க்கப்பட்டாலும், கூட்டணிக் கட்சிகள் தங்கள் தனித்துவத்தை நிரூபிக்கவும், ஆளும் கட்சியின் மீதான அதிருப்திகளை வெளிப்படுத்தும் வகையிலும் பல்வேறு தருணங்களில் இத்தகைய முடிவுகளை எடுத்துள்ளன.

    பாமக

    2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்து தேர்தலைச் சந்தித்தன. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியைப் பிடித்தது. ஆட்சி அமைந்த சில வருடங்களிலேயே ஆளும் அதிமுக அரசுடன் பாமகவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    கூட்டணி அதிகாரப்பூர்வமாக உடையாத நிலையிலும், இடையில் வந்த இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்காமல் பாமக தனித்து நின்றது. பின்னர் 2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக முழுமையாக திமுக கூட்டணிக்கு மாறியது பாமக.

    Advertisement

    திமுக ஆட்சியில்

    2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக தனி மெஜாரிட்டி பெறாத நிலையில், காங்கிரஸ், பாமக மற்றும் இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவளித்தன. அந்த காலகட்டத்தில் திமுக அரசின் செயல்பாடுகளுக்கு பாமக அதிருப்தியை வெளிப்படுத்தியது. காங்கிரஸ் கட்சியும் சில தருணங்களில் திமுகவுடன் முட்டிக்கொண்டது.

    2010 பென்னாகரம் இடைத்தேர்தலில் கருணாநிதி அரசின் மீதான அதிருப்தி மற்றும், கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற காரணத்தை முன்வைத்து அந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரிக்காமல் பாமக தனித்துப் போட்டியிட்டது. அதில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி 2ஆம் இடம் பிடித்தது.

    Advertisement

    மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்களில் பாமக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் திமுகவுக்கு எதிராக தங்கள் வேட்பாளரைக் களமிறக்கிப் போட்டியிட்டன.

    தேமுதிக

    2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் விஜயகாந்தின் தேமுதிக இணைந்து கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்தின. தேமுதிக எதிர்க்கட்சித் அந்தஸ்தைப் பெற்றது. ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே விஜயகாந்திற்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் இடையே சட்டமன்றத்திலேயே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கூட்டணி முறிந்தது.

    அதன் பின்னர் வந்த 2012 புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு எதிராகத் தேமுதிக தனித்துக் களம் இறங்கியது. இந்த இடைத்தேர்தலை திமுக புறக்கணித்த நிலையில், தேமுதிக 2ஆம் இடம் பிடித்தது.

    Advertisement

    பின்னணி காரணங்கள்

    ஆட்சி மீது அதிருப்தி இருக்கும் போது, அதை வெளிப்படையாகக் காட்ட இடைத்தேர்தல் புறக்கணிப்பு அல்லது தனித்துப் போட்டி என்ற முடிவை கூட்டணி கட்சிகள் எடுக்கின்றன. தங்களின் சுய பலத்தை நிரூபிக்க தோழமைக் கட்சிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகின்றன.

    அந்தவகையில், தற்போது தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், தவெக அரசு மீதான அதிருப்தி காரணமாக இந்த இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்காமல் தலா 1 தொகுதியில் தனித்துக் களமிறங்குகின்றன.

    English Summary

    In the history of elections in Tamil Nadu, it is not unusual for a party—while remaining part of an alliance—to contest a by-election alone against the ruling party or to switch alliances for the contest; this has happened on several occasions.