வேலையைக் காட்டிய தோழர்கள்.. தவெக தோழமைக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் கம்யூனிஸ்ட்கள்! என்னாச்சு?

  • சென்னை: தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் தோழமைக் கட்சிகளுக்கான முதல் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஜூலை 1ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து அமைச்சர்கள் அழைப்பு விடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று இடதுசாரி கட்சிகள் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் என்று அறிவித்துள்ளன.

    Advertisement

    2026 சட்டப்பேரவைத் தேர்தலி நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தாலும், தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்ட முடியவில்லை.

    Advertisement

    இதையடுத்து காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் விஜய் தலைமையில் அரசு அமைந்தது.

    தவெக

    ஆட்சி அமைந்து சில வாரங்கள் கடந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதோடு, அடுத்தகட்ட அரசியல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க ஜூலை 1ஆம் தேதி தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு முதல்வர் விஜய் தலைமை தாங்க உள்ளார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களை அமைச்சர்கள் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.

    Advertisement

    தோழமைக் கட்சி கூட்டம்

    நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பு வழங்கப்பட்ட நிலையில், இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்து அழைப்பு வழங்கினர். அப்போது, ஜூலை 1ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    புறக்கணிக்கும் கம்யூனிஸ்ட்கள்

    கூட்டணி அரசின் எதிர்கால செயல்பாடுகள், சட்டப்பேரவை நடைமுறைகள், இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் பேசப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.

    Advertisement

    முதல்வர் விஜய்

    அதே நேரத்தில் முதல்வர் விஜயை நேரில் சந்தித்து பேசுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்கள் அறிவித்துள்ளனர். தமிழக வெற்றி கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதால் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும், அதே நேரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தொடரும் என இடதுசாரிகள் கூறியுள்ளன.

    விசிக, மதிமுக

    மறுபுறம், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் என்று அறிவித்துள்ளன. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் முக்கிய கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் என்பதால், இந்தச் சந்திப்புக்கு அரசியல் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

    English Summary

    CPI and CPM skip TVK alliance meeting, while Congress, VCK, MDMK and IUML confirm participation.