சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார். இன்றைய தினம் அவரது உடலுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினார். நாளைய தினம் அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், மாலையில் அமைச்சர்கள் என். ஆனந்த், நிர்மல் குமார், ராஜ்மோகன் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் நேரில் வந்து மாலை அணிவித்து தங்களது ஆழ்ந்த அஞ்சலியை செலுத்தினர் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்களும், பொதுமக்களும் அங்குத் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன்,"ஒரு துயரமான நாள் இது. வெள்ளைத் தோலுக்கு மட்டுமே விசில் அடித்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில், கருப்பு தோலுக்கும் கதவுகளைத் திறந்துவிட்ட மாமனிதர் இயக்குநர் இமயம். இவர் அறிமுகப்படுத்திய நட்சத்திரங்களின் பட்டியலை வாசித்து முடிக்க நேரம் போதாது. இவர் தமிழ் சினிமாவினுடைய புரட்சியாளர்.. திரைக்கதை, வசனம், இயக்கம் என்ற தளங்களில் இயங்கிய ஒரு மாபெரும் பொக்கிஷம். தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்ல, சர்வதேச அளவிலேயே ஒட்டுமொத்தத் திரையுலகிற்கும் ஒரு மிக முக்கியமான திசைகாட்டியாக இருந்தவர். அவரை நாங்கள் இழந்திருக்கிறோம். எங்கள் குடும்பத்தினுடைய ஒரு மூத்த சகோதரனை நாங்கள் இழந்திருக்கிறோம். காலம் கருணையற்றது. இந்த இக்கட்டான நேரத்திலே அவரை இழந்து வாடக்கூடிய அவருடைய குடும்பத்தார், தமிழ்த் திரையுலகில் இருக்கக்கூடிய அனைத்துச் சங்கங்களினுடைய நிர்வாகிகள், அவரினுடைய அன்பர்கள், நண்பர்கள் அத்தனை பேருக்கும் எங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இயக்குநர் இமயத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவின்படி, முழு அரசு மரியாதையோடு அவருடைய இறுதி யாத்திரை நடைபெறும்.. உலகம் உள்ளவரை, திரைத்துறை உள்ளவரை நிச்சயமாக இயக்குநர் இமயம் பாரதிராஜா புகழ் ஓங்கி ஒலிக்கும். அரசுத் தரப்பில் தான் உட்பட 3 அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினோம். அவரது உடல் நாளைய தினம் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அந்த இறுதி நடைபெறுகிறது. அங்கே அரசு சார்பில் அமைச்சர் அமைச்சர் நிர்மல் குமார் இருப்பார்.. முழு அரசு மரியாதையோடு காவலர்கள் துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரினுடைய புகழுடலுக்கு இறுதிச் சடங்குகள் நடக்கும். குடும்பத்தாரோடு கலந்து பேசி அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அரசு தயாராக இருக்கிறது என்பதையும் தெரியப்படுத்தி இருக்கிறோம். அவர்களினுடைய சொந்தங்களோடு, பந்தங்களோடு ஆறுதல் தெரிவித்திருக்கிறோம். இது அவர்களினுடைய குடும்பத்தினுடைய இழப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாகத் தமிழ்க் கலைப் பண்பாட்டுச் சூழலுக்கான ஒரு பேரிழப்பு. இந்தத் துக்கத்தில் அரசும் பங்கேற்கிறது. பாரதிராஜா குடும்பத்தினருக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும், அவர்களினுடைய எந்தக் கோரிக்கையாக இருந்தாலும், அது முதல்வரோடு ஆலோசித்து நிச்சயமாக அதைப் பரிசீலனை செய்து நிறைவேற்றித் தரப்படும்" என்றார்.ராஜ்மோகன்
இரங்கல்
அரசு மரியாதையுடன்
தேவையான உதவிகள்