மாணவிகள் முன்னிலையில் மல்லுக்கட்டிய எம்எல்ஏக்கள்.. சட்டசபைக்கு வந்தவர்கள் கண்ட காட்சி.. ஷாக் சம்பவம்

  • சென்னை: தமிழ்நாடு சட்டசபை எப்படி நடக்கிறது என்பதையும், அதன் மாண்பையும், ஜனநாயக நெறிமுறைகளையும் நேரில் பார்த்து அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் இன்று சட்டசபைக்கு பள்ளி மாணவிகள் பலர் வந்திருந்தனர். ஆனால் அந்த பள்ளி மாணவிகள் முன்னிலையில்.. எம்எல்ஏக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    சட்டசபை நிகழ்வுகளை அவ்வப்போது காணப்பதற்காக விருந்தினர்களாக மாணவர்கள், மாணவிகள், அரசியல் ஆர்வம் உள்ளவர்கள் வருவது வழக்கம். அதன்படியே இன்று அரசு பள்ளி மாணவிகள் பலர் சட்டசபை நிகழ்வுகளை காண்பதற்காக வந்திருந்தனர். அப்போது நடந்த சில சம்பவங்கள்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

    Advertisement

    இன்று பார்வையாளர் மாடத்தில் பள்ளி மாணவிகள் அமைதியாக அமர்ந்திருந்த வேளையில், கீழே அவையோ பள்ளிச் சிறுவர்கள் சண்டையிடும் மைதானம் போலக் காட்சியளித்தது. மக்கள் நலன், கொள்கை முடிவுகள், துறைசார் மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகள், மாணவிகள் முன்னிலையிலேயே தனிநபர் விமர்சனங்களிலும் தரக்குறைவான வார்த்தைப் போரிலும் இறங்கி கடும் கூச்சலை எழுப்பிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செந்தில் பாலாஜி பேசசு

    நீதி, சிறைத்துறை, சட்டம், மின்சாரம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி பேசத் தொடங்கினார். அப்போது மின்சாரத் துறை சரியாக நிர்வகிக்கப்படவில்லை என்றும், துறை நிர்வாகத்தில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி விமர்சித்தார். இதற்கு உடனடியாகப் பதிலளிக்க எழுந்த மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் அதை பற்றி எதுவும்பேசவில்லை.. அதாவது புள்ளி விவரத்திற்கு அந்த புள்ளி விவர ரீதியாக பதில் தரவில்லை.. மாறாக "கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்சார வாரியம் சந்தித்த கடுமையான இன்னல்களையும் நிதிச்சுமைகளையும் நான் விளக்குகிறேன்" என்று பேசினார்.

    Advertisement

    அவ்வாறு பேசும்போது, கரூரில் தவெக தலைவர் விஜய், செந்தில் பாலாஜி குறித்துப் பேசிய ஒரு பழைய விவகாரத்தை நிர்மல் குமார் அவையில் குறிப்பிட்டார். உடனடியாகத் தனது வார்த்தையைத் திருத்திக்கொள்ள முயன்ற அவர், "மன்னிக்கவும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி" என்றார். எனினும், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து கூச்சலிட்டனர். இதையடுத்து, நிர்மல் குமார் தனது பேச்சைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, அந்த வார்த்தை அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் நிர்மல் குமாரை நோக்கி, "மாண்புமிகு 'சங்கி' அமைச்சர்... மன்னிக்கவும், மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர்" என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். இதனால் கடும் கோபமடைந்த நிர்மல் குமார், "பாத்ரூமில் 3 மணி நேரம் உட்கார்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றிப் பேச எங்களுக்கு 5 நிமிடம் கூட ஆகாது.. நாங்களும் தகாத வார்த்தைகளால் பேசத் தொடங்கினால் அவையை நடத்த முடியாது" என்று ஆவேசமாகத் திருப்பி அடித்தார்.

    Advertisement

    இதனால் அவையில் பதற்றம் மேலும் அதிகரித்தது. ஆவேசமடைந்த உதயநிதி ஸ்டாலின் சபாநாயகரை நோக்கி, "தமிழ்நாட்டில் யார் பாத்ரூமில் உட்காருகிறார்கள், எவ்வளவு நேரம் உட்காருகிறார்கள் என்பதைக் கண்காணிக்கவே தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளாரா? அவையில் யார் முதலில் வரம்பு மீறிப் பேசினார்கள் என்பது சபாநாயகரான உங்களுக்கு நன்றாகத் தெரியும்" என்று கேள்வி எழுப்பினார்.

    இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், சட்டமன்ற உறுப்பினர் ஆதவ் அர்ஜுனா பதிலளிக்க எழுந்தார். அப்போது திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். உடனே ஆதவ் அர்ஜுனா, "நான் சொல்வதைக் கேட்டுவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் பேசட்டும்" என்று கூறி ஒரு கருத்தைத் தெரிவித்தார். அந்த வார்த்தையும் விதிகளுக்குப் புறம்பாக இருந்ததால், சபாநாயகரால் உடனடியாக அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.

    Advertisement

    இதற்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் துறை சார்ந்த கேள்விகளைத் தரவுகளுடன் மட்டுமே முன்வைத்தார் என்றும், ஆனால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆக்கப்பூர்வமான பதில்களைத் தராமல் தனிநபர் விமர்சனங்களை முன்வைத்து அவையின் கவனத்தைத் திசைதிருப்புவதாகவும் குற்றம்சாட்டினார்.

    மாணவிகள் முன் மல்லுக்கட்டி எம்எல்ஏக்கள்

    இப்படி மாணவிகள் முன் இன்று எம்எல்ஏக்கள் சண்டை போட்ட விவகாரம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. ஜனநாயகத்தின் மாண்பையும் சட்டமன்ற விவாதங்களின் ஆழத்தையும் கற்றுக்கொள்ள வந்த இளம் மாணவிகளுக்கு, பெரியவர்கள் நிறைந்த சட்டசபையில் அரங்கேறிய இந்த வாக்குவாதமும் தனிநபர் தாக்குதல்களும் பெரும் ஏமாற்றத்தையே பரிசாக அளித்தன.

    Advertisement

    பள்ளிகளில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கத்தை உபதேசிக்கும் தலைவர்களே, சபையில் சிறுவர்கள் போல வார்த்தைகளால் மோதிக்கொண்ட காட்சி அவையின் கண்ணியத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

    English Summary

    Like School Kids in Front of Students: Fierce War of Words Rocks Tamil Nadu Assembly