சென்னை: குறுவை சாகுபடி நிவாரணம் ஏற்கனவே விவசாயிகளுக்கு தமிழக அரசு கொடுத்துவிட்டது என்ற முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். தமிழக அரசு கொடுத்த சிறப்பு தொகுதி வேறு, வறட்சி நிவாரணம் என்பது வேறு என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், இந்த விவகாரத்தில் பேப்பர் படிச்சா மட்டும் போதாது அனைவர் கருத்தை கேட்டால்தான் புரியும் என்றும் கூறியுள்ளார்.
சட்டசபையில் பொது பட்ஜெட் தொடர்பான விவாதம் தொடங்கி இருக்கிறது. இந்த விவாதத்திற்கு முன்பாக காவிரி விவகாரம், மேகதாது பிரச்சனையில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை மற்றும் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி என்று சொல்லிவிட்டு அரைகுறை தள்ளுபடி ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
அதுமட்டுமல்லாமல் காவிரியில் தண்ணீர் வராததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் விஜய், காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சி சில விவரங்களை கேட்டுள்ளனர். காவிரி நம்முடைய உணர்வு ரீதியான விவகாரம்.. அதை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளி கூட நமது அரசுக்கு இல்லை.. மேகதாது விவகாரத்தில் நாம் எல்லோரும் சேர்ந்தே தீர்மானம் போட்டோம். இன்றைய காலத்தில் பகை நாடுகளே தண்ணீர் பிரச்னையை பேசி தீர்க்கிறார்கள். நாம் ஏன் பக்கத்து மாநிலத்தோடு பேசி தீர்க்க கூடாது என்று நினைத்தேன். அதற்காகவே கர்நாடகா போகலாம் என்று முயற்சி செய்ய நினைத்தேன் என்றார். தொடர்ந்து வறட்சி நிவாரணம் தொடர்பாக விஜய் பேசுகையில், விவசாயிகளுக்கு ஏற்கனவே அறிவித்து விட்டோம். நாங்கள்தான் அரசியல் என சொல்லக்கூடியவர்கள், ஏன் இதை தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். பேப்பர் படித்தாலே இதையெல்லாம் தெரிந்து கொண்டிருக்க முடியும் என்று பதில் அளித்தார். அதற்கு உதயநிதி ஸ்டாலின், நீங்கள் அறிவித்திருக்கக் கூடிய சிறப்பு நிவாரணத் தொகுப்பு என்பது எல்லா அரசுகளும் அறிவிக்கக்கூடியது தான். ஆனால் தற்பொழுது ஏற்பட்டிருப்பது கடுமையான வறட்சி. அதற்கு ஏன் தனியாக விவசாயிகள் பலனடையும் நிதி உதவி அறிவிக்கவில்லை என்பதுதான் கேள்வி.. இதையெல்லாம் பேப்பர் படித்தால் மட்டும் தெரிந்து கொள்ள முடியாது. அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி அனைத்து விவசாய சங்கங்களுடன் ஆலோசித்தால் தான் தெரிந்து கொள்ள முடியும் என்று பதிலடி கொடுத்தார்.