இடைத்தேர்தல் இப்போதைக்கு வராது.. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சொன்ன ரகசியம்!

  • சென்னை: சட்டசபை இடைத்தேர்தல் இப்போதைக்கு வராது என்றும், 6 மாதங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போகவும் வாய்ப்புகள் உள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசி இருக்கிறார். அதேபோல் அதிமுகவினர் மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

    Advertisement

    சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிருப்தி நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மொத்தமாக 84 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்க எம்ஜிஆர் மாளிகைக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    Advertisement

    பின்னர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சட்டசபை இடைத்தேர்தல் இப்போதைக்கு வராது.. ஆனால் எப்போது தேர்தல் அறிவித்தாலும் அங்கு மீண்டும் அதிமுக வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.

    ஒன்றிய, நகர, வட்டம், நகர, பேரூராட்சி, கிராமப் பகுதிகள் என்று அனைத்து கட்டங்களில் அதிமுகவினர் மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்த வேண்டும். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், நாம் மக்கள் சந்திப்பு கூட்டங்களை அதிகரிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் 6 மாதத்தில் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. இன்னும் 6 மாதங்கள் தள்ளிப் போகலாம். அதற்கு இப்போதே தயாராக வேண்டும்.

    Advertisement

    பொதுச்செயலாளராக நான் உழைப்பது போல் கட்சி நிர்வாகிகள் அனைவரும் 100% உண்மையாக உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். அதேபோல் பொதுக்குழு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக எந்தவித பேச்சுகளையும் எடப்பாடி பழனிசாமி பேசவில்லை என்று தெரிகிறது.

    செப்டம்பர் 8ஆம் தேதியுடன் சட்டசபை முடிவடைய இருக்கும் சூழலில், அதிமுகவின் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகள் எதை நோக்கி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளன. அதேபோல் சட்டசபை முடிவடைந்த பின் அதிமுக நிர்வாகிகள் சாரை சாரையாக தவெக பக்கம் ஒதுங்கவும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

    English Summary

    Edappadi Palaniswami: Local Body Polls Delayed by 6 Months? Edappadi Palaniswami Drops Major Hint at AIADMK Meeting