எங்களுக்கு மட்டும் ஆசையா? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு ஏன் தெரியுமா? இன்னமும் 703 ரூபாய் லாஸ் தானாம்!

  • சென்னை: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பது நாடு முழுவதும் குடும்பத் தலைவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் சிரமப்படும் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களுக்கு இந்த விலை உயர்வு கூடுதல் சுமையாக மாறியுள்ளது. இந்நிலையில் ஏன் இந்த சிலிண்டர் விலை உயர்வு? என எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன.

    Advertisement

    இன்றைய தினம் ( ஜூன் 07) பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் இதுவரை ரூ.928.50க்கு விற்கப்பட்டு வந்த வீட்டு சிலிண்டர், தற்போது ரூ.957.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    அதேபோல் டெல்லியில் ரூ.913 ஆக இருந்த சிலிண்டர் விலை ரூ.942 ஆக உயர்ந்துள்ளது. மற்ற நகரங்களிலும் இதே அளவிலான உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிற்து.

    எல்பிஜி விலை உயர்வு

    இந்த நிலையில், வீட்டு சிலிண்டர் விலையும் மீண்டும் அதிகரிக்கப்பட்டிருப்பது பொதுமக்களை கவலையடைய செய்துள்ளது. குறிப்பாக கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மூன்றாவது முறையாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வுக்கு என்ன காரணம் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன. அவர்களது தகவலின்படி, தற்போது விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு வீட்டு உபயோக சிலிண்டருக்கும் சுமார் ரூ.703 வரை இழப்பு ஏற்பட்டு வருகிறதாம்.

    Advertisement

    சமையல் எரிவாயு

    சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அரசியல் பதற்றம், போர் சூழல் மற்றும் கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக எரிசக்தி பொருட்களின் இறக்குமதி செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் எரிவாயு தேவையின் பெரும்பகுதி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதனால் சர்வதேச சந்தையில் விலை உயரும்போது அதன் தாக்கம் உள்நாட்டு சந்தையிலும் நேரடியாக பிரதிபலிக்கிறது.

    எண்ணெய் நிறுவனங்கள்

    எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில், சர்வதேச சந்தை நிலவரத்தை கணக்கில் எடுத்தால் சிலிண்டர் விலையை இன்னும் அதிகமாக உயர்த்த வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் பொதுமக்கள் மீது கூடுதல் சுமை ஏற்படக்கூடாது என்பதற்காக மிகக் குறைந்த அளவிலேயே ரூ.29 மட்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமின்றி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளது.

    Advertisement

    வணிக சிலிண்டர்

    ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை கடந்த இரண்டு மாதங்களில் பல கட்டங்களாக உயர்த்தப்பட்டது. தற்போது சென்னையில் ஒரு வணிக சிலிண்டர் ரூ.3,283க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் வாகன எரிபொருளாக பயன்படுத்தப்படும் சிஎன்ஜி விலையும் உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் போக்குவரத்து செலவிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விலை உயர்வு

    எரிபொருள் விலை உயர்வு என்பது சாதாரணப் பிரச்சினை அல்ல. அதன் தாக்கம் அன்றாட வாழ்க்கையின் பல துறைகளிலும் எதிரொலிக்கும். போக்குவரத்து செலவு அதிகரித்தால் காய்கறி, பழங்கள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது. இதனால் வரவிருக்கும் வாரங்களில் சந்தைகளில் விலை அதிகரிக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக மாதாந்திர செலவுகளை கணக்கிட்டு குடும்பத்தை நடத்தும் நடுத்தர வர்க்கத்தினர் இந்த விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

    Advertisement

    சிலிண்டர் விலை

    இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் இறக்குமதி செலவுகளை கருத்தில் கொண்டு தான் விலை நிர்ணயம் செய்யப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன. சர்வதேச சந்தையில் எரிசக்தி பொருட்களின் விலை குறைந்தால் மட்டுமே எதிர்காலத்தில் சிலிண்டர் விலை குறையும் வாய்ப்பு இருப்பதாகவும், தற்போதைய சூழலில் விலை உயர்வை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    English Summary

    Domestic LPG cylinder prices have risen again. Oil companies say they still incur a loss of ₹703 on every household cylinder sold.