சென்னை: இந்திய இசை வரலாற்றில் ஒரு புதிய பொற்காலம் உதித்திருக்கிறது. உலகமே வியந்து பார்க்கும் இசை மேதை, தமிழகத்தின் இளம் கலைஞர் லிடியன் நாதஸ்வரம், தனது அசாத்தியத் திறமையால் உலக அரங்கில் இந்தியாவிற்கு மீண்டும் ஒரு வரலாற்றுப் பெருமையைத் தேடித்தந்துள்ளார். தற்போது லிடியன் தனது முதல் சிம்பொனி படைப்பை (Original Symphony) வெற்றிகரமாக உருவாக்கி, பதிவு செய்துள்ளார்.
இந்த அற்புதம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரே தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார். "நியூ பிகினிங்க்ஸ்" - ஆசியாவின் மிக இளம் வயது சாதனை!"நியூ பிகினிங்க்ஸ்" (New Beginnings) - Symphony No. 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இசைப் படைப்பு, வெறும் இசையமைப்பு மட்டுமல்ல; இது ஆசிய மற்றும் இந்திய இசை வரலாற்றின் மிக முக்கிய மைல்கல்.
"பிரபஞ்சத்தின் ஆசியுடனும், உண்மையான தரவுகளின் அடிப்படையிலும், ஒரு சுயமான சிம்பொனியை உருவாக்கிப் பதிவு செய்த மிக இளம் வயது இந்திய மற்றும் ஆசிய இசையமைப்பாளராக அங்கீகரிக்கப்பட்டதில் நான் பெருமையும் பணிவும் கொள்கிறேன்" என்று லிடியன் குறிப்பிட்டுள்ளார். இந்த சிம்பொனி படைப்பு, உலகின் மிகச் சிறந்த ஆர்கெஸ்ட்ரா குழுக்களில் ஒன்றான புகழ்பெற்ற 'லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா'வால் (London Symphony Orchestra) வாசிக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற மேட் டங்க்லி (Matt Dunkley) இந்த இசைக்கோவையை முன்னின்று நடத்தியுள்ளார். இந்த பிரம்மாண்டத் திட்டத்திற்கு திட்டத் தயாரிப்பாளராக (Project Producer) போஹிமியா ஜங்ஷன் லிமிடெட் நிறுவனத்தின் ஆன்ட்ரூ டி. மேக்கே (Andrew T. Mackay) செயல்பட்டுள்ளார். ┌ உலக இசை தினத்தில் சென்னையில் பிரம்மாண்ட அரங்கேற்றம்! இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சிம்பொனியின் அதிகாரப்பூர்வ ஆடியோ வெளியீடு மற்றும் முதல் அரங்கேற்றம் (Audio Launch & Premiere) வரவிருக்கும் ஜூன் 21 உலக இசை தினத்தன்று (World Music Day), மாலை 4 மணி முதல் சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறவுள்ளது. அதே நாளில், அனைத்து முன்னணி டிஜிட்டல் ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இந்த இசைக்கோர்வை உலகளாவிய ரீதியில் வெளியாகிறது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது புக்மைஷோ (BookMyShow) தளத்தில் 'Lydian's Symphony No. 1 "New Beginnings"' என்ற பெயரில் தொடங்கியுள்ளது. இந்த உன்னதமான கலை வடிவம், இதில் உழைத்த இசைக் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் மிகக் குறைந்த, எளிய கட்டணத்துடன் கூடிய நிகழ்ச்சியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதனைகளின் சிகரம்: யார் இந்த லிடியன் நாதஸ்வரம்? மிகச் சிறு வயதிலேயே உலகையே தனது விரல் அசைவுகளால் கட்டிப் போட்டவர் லிடியன். உலக அளவில் முதலிடம்: அமெரிக்காவின் சிபிஎஸ் (CBS) தொலைக்காட்சியின் 'தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்' (The World's Best) என்ற சர்வதேசத் திறமைப் போட்டியில் பியானோ வாசித்து முதலிடம் பிடித்து, 1 மில்லியன் டாலர் பரிசை வென்றார். பல்வேறு கருவிகளின் மாஸ்டர்: பியானோ, டிரம்ஸ், மிருதங்கம், ஹார்பெஜ்ஜி உட்பட 14-க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை அசாத்தியமாக வாசிக்கும் திறன் கொண்டவர். தமிழோடு இணைந்த இசை: கடந்த ஆண்டு 1330 திருக்குறள்களையும் பாடலாக மாற்றி 'குறளிசைக் காவியம்' என்ற தனித்துவமான படைப்பை வெளியிட்டார். குருவின் வழியில் சீடர்: இளையராஜாவின் சிம்பொனிப் பாதை மேற்கத்திய இசையின் உச்சமாகக் கருதப்படும் 'சிம்பொனி' (Symphony) வடிவத்தை இந்திய மண்ணிற்குத் தந்து, லண்டனின் ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா போன்ற உலகக் குழுக்களை வியக்க வைத்தவர் இசைஞானி இளையராஜா. அண்மையில் கூட லண்டனில் தனது பிரம்மாண்ட சிம்பொனி படைப்பை நிகழ்த்தி, உலக அரங்கில் தமிழ் இசையின் ஆளுமையை நிலைநாட்டினார். இசைஞானி இளையராஜாவின் ஒரே மாணவர் என்ற பெருமைக்குரியவர் லிடியன் நாதஸ்வரம் என்பது குறிப்பிடத்தக்கது. தனது குருநாதரின் அடியொற்றி, அதே லண்டன் மண்ணின் ஆகச் சிறந்த இசைக்குழுவோடு இணைந்து, மிக இளம் வயதிலேயே தனக்கென ஒரு சொந்த சிம்பொனியைப் படைத்து, குருவுக்குப் பெருமை சேர்த்துள்ளார் இந்த இளம் சீடர். "இது ஒரு புதிய தொடக்கம் மட்டுமே" என்று அடக்கத்துடன் கூறும் லிடியனின் இந்த இசைப் பயணத்தைக் கொண்டாட, ஜூன் 21 அன்று சென்னை மியூசிக் அகாடமியில் இசை ஆர்வலர்களின் பெருங்கூட்டம் கூடும் என்பதில் ஐயமில்லை!