மாதவரம் தொழிற்பேட்டையில் அடிக்கடி கரெண்ட் கட்.. குளிக்க கூட தண்ணீர் இல்லை.. கொதித்த நிறுவனங்கள்

  • சென்னை: சென்னை மாதவரம் அருகே வடபெரும்பாக்கத்தில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மின்வாரிய அலுவலகத்தைச் சிறு குறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார்கள். எங்கள் பகுதியில் முறையான சாலை வசதிகளும் இல்லை. மழைநீர் வடிகால் அமைப்பதாகக் கூறி வீதிகளைத் தோண்டிப் போட்டுள்ளனர் என்று கூறினார்கள்

    Advertisement

    அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வடபெரும்பாக்கத்தில் மின்சாரம் சரிவர விநியோகிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பகுதியில் மின்சாரம் தடைபட்டால், அது மீண்டும் வருவதற்கு 2 முதல் 3 நாட்கள் வரை ஆகிறது. இங்குள்ள அனைவருமே சிறு குறு தொழில் நடத்துபவர்கள். பலர் வங்கி வழங்கி கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் நிறுவனங்களை மூடிவிட்டுச் சென்றுவிட்டனர்.

    Advertisement

    இப்போது இயங்கிக் கொண்டிருக்கும் சில தொழில் நிறுவனங்களும் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. ஒவ்வொரு நிறுவனத்திலும் 20 முதல் 30 தொழிலாளர்கள் வரை வேலை செய்கிறார்கள். மின் தடை காரணமாக 1 அல்லது 2 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டிய சூழல் ஏற்படும்போது, தொழிலாளர்களும் நிறுவன உரிமையாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

    இன்னும் சில நாட்களில் மழைக்காலமும் தொடங்கவுள்ளது. எங்களுக்குக் கிடைக்கும் சில ஆர்டர்களும் மின்சாரம் இல்லாததால் கைநழுவி ரத்தாகிவிடுகின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் மின்வாரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து இந்தச் சிக்கலைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். உதவிப் பொறியாளர் மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகளுக்குப் பல புகார் கடிதங்களை அளித்துள்ளோம்.

    Advertisement

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அதிகாரியையும் சந்தித்துப் பேசினோம். எங்கள் பகுதியில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருவதால், இங்கு தனியாக மின்நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினோம். மாதவரம் தொழிற்பேட்டையைப் பொறுத்தவரை நாங்கள் கோடிக்கணக்கில் மின்கட்டணம் செலுத்தி வருகிறோம்.

    அதுபோதாதென்று தற்போது கூடுதல் வைப்புத்தொகையும் வசூலிக்கிறார்கள். அதையெல்லாம் கூட நாங்கள் பெரிதுபடுத்தவில்லை; ஆனால் மின்சாரம் இல்லாமல் எங்களால் தொழிலைத் தொடரவே முடியவில்லை.

    மேலும், எங்கள் பகுதியில் முறையான சாலை வசதிகளும் இல்லை. மழைநீர் வடிகால் அமைப்பதாகக் கூறி வீதிகளைத் தோண்டிப் போட்டுள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் ஒருவர் உயிரிழந்தார். கழிப்பறை வசதிக்காகக் கழிவுநீர் கால்வாய்களையும் தோண்டி வைத்துள்ளதால், ஒரு வாகனம் கூடச் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. மின்சாரமும் இல்லை, சாலையும் இல்லை என்பதால் எங்கள் சங்க உறுப்பினர்கள் எங்களைக் கேள்வி கேட்கிறார்கள்.

    Advertisement

    நாங்கள் சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, தொழில் வரி , வருமான வரி என அனைத்தையும் முறையாகக் கட்டி வருகிறோம். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண அண்மையில் சட்டமன்ற உறுப்பினரையும் நேரில் சந்தித்து முறையிட்டோம். ஆனால் அவரோ, 'கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சரி செய்ய முடியும்' எனக் கூறிவிட்டார்.

    மின்சாரம் இல்லாததால் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் கூடத் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். ஒவ்வொரு நிறுவனத்திலும் தொழிலாளர்கள் வேலையின்றி முடங்கியுள்ளனர். வடபெரும்பாக்கம் பகுதியின் அவல நிலையை ஊடகங்கள் நேரில் வந்து படம்பிடித்து மக்களுக்குக் காட்ட வேண்டும். எந்தச் சாலைகள் சீரமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறதோ, அங்குச் சாலையே இருக்காது. நீங்களே நேரில் வந்து பார்த்துவிட்டுத் தீர்வு சொல்லுங்கள்" எனத் தொழில் நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

    English Summary

    Protest in Madhavaram: MSME Owners Siege TNEB Office Over Frequent Power Cuts and Damaged Roads in Vadaperumbakkam