“எ.வ.வேலு வெற்றி பெற்றது செல்லும்”.. தவெக வேட்பாளரின் தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்!

  • சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக திருவண்ணாமலை தொகுதி தவெக வேட்பாளர் தொடர்ந்த தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

    Advertisement

    திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு போட்டியிட்டு 2,455 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகத்தை தோற்கடித்தார். இந்த நிலையில் எ.வ.வேலு வெற்றிக்கு எதிராக அருள் ஆறுமுகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    Advertisement

    இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சார்பில் நிராகரிப்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 16) நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறிய நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி, தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளார். இதன் மூலம் எ.வ.வேலு வெற்றி செல்லும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக, தவெக எம்எல்ஏ இளையராஜா, பெருந்துறை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ராஜினாமா செய்த ஜெயக்குமார், கோபிசெட்டிப்பாளையம் எம்எல்ஏவும் அமைச்சருமான செங்கோட்டையன், கோவை தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி ஆகியோருக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் தேர்தல் வெற்றியை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில் திருவண்ணாமலையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    English Summary

    Madras High Court has dismissed the election petition against former DMK Minister EV Velu.