ஜெம் வீரமணி வழக்கில் அதிரடி.. அமைச்சர்கள், திமுகவினருக்கு ஐகோர்ட் முக்கியமான அறிவுறுத்தல்

  • சென்னை: ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கில் திமுக அரசு மீது குற்றம் சாட்டி கருத்துகள் தெரிவிக்க அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு தடை விதிக்க கோரி திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் தொழில் அதிபர் ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என திமுகவினருக்கு அறிவுறுத்தும்படி அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களை அறிவுறுத்தியுள்ளது.

    Advertisement

    சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காமல் முந்தைய திமுக அரசு தப்பிக்க விட்டுவிட்டதாக தமிழக அமைச்சர்கள் நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் அடுத்தடுத்து பேட்டி அளித்து வருகிறார்கள். ஜெம் வீரமணி வழக்கில் நடவடிக்கை தாமதம் ஆனதற்கு திமுகவே காரணம் என தவெக குற்றம்சாட்டி பதிவிட்டு வருகிறது.

    Advertisement

    அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் முன்பாக பேசும் போது, "திமுக ஆட்சியின்போது ஜெம் வீரமணி மீதான புகாரில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? போக்சோ வழக்கு குறித்து நானும், நிர்மல் குமாரும் பேச தடை விதிக்க வேண்டும் என்கிறது திமுக. ஜனநாயகம் அற்ற செயலை திமுக செய்துள்ளது. வரலாற்றிலேயே முதல் முறையாக ஏடிஜிபி மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுத்துள்ளார்" என்று கூறியிருந்தார்.

    முன்னதாக கடந் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "வீடியோ ஆதாரங்கள் இருந்தும் யார் சொல்லி விசாரணையை நிறுத்தினார்கள்? அப்போது சட்டம் ஒழுங்கை கவனித்தது முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தான். அவருக்கு இதுபற்றித் தெரியாதா?" எனக் கேள்வியெழுப்பினார். "வீரமணி தொடர்புடைய வழக்கின் விசாரணையில் எந்தவித குறைபாடுகளும் இருக்காது" எனக் கூறிய சி.டி.ஆர்.நிர்மல்குமார், "தி.மு.க ஆட்சியில் நடந்ததற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்." என கேள்வி எழுப்பி இருந்தார். அதேபோல, தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவும், திமுக அரசுக்கு எதிராக கடுமையாக குற்றம்சாட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது.

    Advertisement

    இது திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கில் திமுக அரசு மீது குற்றம் சாட்டி கருத்துகள் தெரிவிக்க அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு தடை விதிக்க கோரி திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

    திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தாக்கல் செய்த மனுவில், 'ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கும்படி அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தொழில்நுட்ப பிரிவுக்கு உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார் . மேலும் ஜெம் வீரமணிக்கு எதிராக 2025-ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி புகார் வந்த நிலையில் மறுநாளே வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், எந்த தலையிடும் இல்லாமல், எந்த தாமதமும் செய்யப்படாமல் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

    Advertisement

    மேலும் உண்மை நிலைக்கு மாறாக திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாகவும் துரைமுருகன் குற்றம்சாட்டினார். மேலும், ஜெம் வீரமணி விவகாரம் தொடர்பாக திமுக மீது குற்றம்சாட்டி அமைச்சர்கள் மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட பதிவுகள் மற்றும் வீடியோக்களை நீக்க வேண்டும் என சமூக வலைதள நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என திமுக சார்பில் மனுவில குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், 'சென்னை உயர் நீதிமன்ற அதிகார எல்லைக்குட்பட்ட மெட்டா, யூடியூப், எக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும்' என வலியுறுத்தினார்.

    Advertisement

    அமைச்சர்கள் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், 'அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டுமானால், முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதுபோன்ற நோட்டீஸ் எதுவும் வழங்காமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல' என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, வழக்கு தொடர அனுமதி கோரி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அமைச்சர்கள், தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு, சமூக வலைதள நிறுவனங்கள் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை திங்கள்கிழமைக்கு தள்ளிவைத்து நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி உத்தரவிட்டார்.

    மேலும் நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, " ஜெம் வீரமணி தொடர்பான வழக்கை படிக்கும்போது மனம் பதறுகிறது. வழக்கு மிகவும் தீவிரமானது என்பதால், இந்த விவகாரம் குறித்து அரசியல் ரீதியாக கருத்து தெரிவிக்க வேண்டாம் என அமைச்சர்களுக்கும், திமுகவினருக்கும் அறிவுறுத்த வேண்டும்' என்று இரு தரப்பு வழக்கறிஞர்களையும் கேட்டுக்கொண்டார். இந்த விவகாரத்தில் இவ்வாறு இரு தரப்பும் மாறி மாறி கருத்து தெரிவிப்பது, வழக்கில் தொடர்புடையவர்கள் தப்பிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

    English Summary

    The MADRAS High Court has advised DMK members and ministers not to politicize the 'Gem' Veeramani case.