அரசு புறம்போக்கு நிலத்தை.. தனது நிலம் என்று கணக்கு காட்டும் சி.எம் விஜய்.. வெடித்த சர்ச்சை!

  • சென்னை: தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, அதே தொகுதியைச் சேர்ந்த எஸ். தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    Advertisement

    தேர்தல் வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் (Form 26), முதல்வர் விஜய் தனது அசையா சொத்துக்கள் குறித்த விவரங்களை முழுமையாகவும் சரியாகவும் தெரிவிக்கவில்லை.. தகவல்களை மறைத்துள்ளார் என்பதே மனுதாரரின் பிரதான குற்றச்சாட்டு.

    Advertisement

    இந்த வழக்கை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என முதல்வர் விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

    னுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகள்

    மனுதாரர் எஸ். தினேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.ஆர். சண்முகநாதன் நீதிமன்றத்தில் முன்வைத்த முக்கிய புகார்கள்:

    1. கொடைக்கானல் வில்பட்டி நிலம்:

    கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் 50 சென்ட் விவசாய நிலத்தை 1997-ல் ரூ.30,000 கொடுத்து வாங்கியதாகவும், அதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கிராமத்தின் அரசு ஆவணமான 'ஏ' பதிவேட்டை (A-Register) சரிபார்த்தபோது, அது அரசு புறம்போக்கு நிலம் என்பது தெரியவந்துள்ளதாக மனுதாரர் வாதிட்டார்.

    Advertisement

    2. போரூர் நிலப்பரப்பு முரண்பாடு:

    சென்னை போரூரில் ரூ.9.13 கோடிக்கு 33,955 சதுர அடி விவசாயம் அல்லாத நிலத்தை 2010-ல் வாங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் பதிவுத்துறை ஆவணங்களின்படி, அவர் ரூ.7.5 கோடிக்கு 20,773 சதுர அடி நிலத்தை மட்டுமே வாங்கியுள்ளார். நிலத்தின் பரப்பளவு மற்றும் விலையில் ஏன் இந்த கூடுதல் தகவல் குறிப்பிடப்பட்டது என்பதற்கு விளக்கம் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

    3. பாடி வணிக வளாகம் சர்ச்சை:

    சென்னை பாடியில் ரூ.7 கோடி மதிப்புள்ள வணிகக் கட்டடம் தனக்குச் சொந்தமானது என்றும், 2009-ல் ரூ.1.95 கோடிக்கு வாங்கி, ரூ.3.9 கோடி செலவில் கட்டடம் கட்டியதாகவும் விஜய் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த 23,460 சதுர அடி வணிகக் கட்டடத்தை வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே, 2026 பிப்ரவரி 12 அன்றே ரூ.35 கோடிக்கு விற்றுவிட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இக்கட்டடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து கொரட்டூர் நிலத்திற்குப் பதிலாக பரிமாற்றப் பத்திரம் மூலம் பெறப்பட்டது; இது நேரடி கொள்முதல் அல்ல என்ற விவரமும் மறைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

    Advertisement

    4. நீலாங்கரை பங்களா பரம்பரை சொத்தா?:

    நீலாங்கரை பங்களாவை பரம்பரைச் சொத்து எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அது பரம்பரைச் சொத்து அல்ல; அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் 2003-ல் வேறொருவரிடம் இருந்து வாங்கி, 2005-ல் தனது மகனுக்கு அன்பளிப்பாக (Settlement Deed) எழுதிக் கொடுத்த சொத்து. இதில் கட்டடப் பரப்பளவு மற்றும் சந்தை மதிப்பில் முரண்பாடுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    முதல்வர் விஜய் தரப்பு வாதம்: ஆதாரமற்ற அற்பக் குற்றச்சாட்டுகள்

    இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து, மனுவை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்யக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி காரசாரமாக வாதிட்டார்:

    Advertisement

    தேர்தல் முடிவில் எந்த மாற்றமும் இல்லை:

    மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, வேட்புமனுவில் குறைபாடுகள் இருந்தால் கூட, அது ஒட்டுமொத்த தேர்தல் முடிவை எந்த விதத்தில் பாதித்தது என்பதை மனுதாரர் நிரூபிக்க வேண்டும். தொகுதி மக்கள், விஜய் என்ற புகழ்பெற்ற மனிதரையும், அவரது நேர்மையான அரசியல் மாற்றத்தையும் நம்பி வாக்களித்துள்ளனர்.

    சொத்து மதிப்பு ஏற்றத்தாழ்வு ஒரு குற்றமா?:

    தனக்கு மாநிலம் முழுவதும் சொத்துகள் இருப்பது மக்களுக்குத் தெரியும். ஒரு சொத்தின் மதிப்பு சிறிதளவு கூடுதலாகவோ குறைவாகவோ காட்டப்பட்டதால் எந்த ஒரு வாக்காளரும் தனது வாக்களிக்கும் முடிவை மாற்றியிருக்க மாட்டார்கள். ரூ.600 கோடிக்கும் அதிகமான சொத்துகளை நேர்மையாக பிரமாணப் பத்திரத்தில் காட்டியுள்ள நிலையில், வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக மனுதாரர் கூறவில்லை; மிகச் சிறிய தொழில்நுட்ப அளவிலான கணக்கீட்டு வேறுபாடுகளை மட்டுமே பெரிதுபடுத்துகிறார்.

    Advertisement

    பெரிதுபடுத்தப்படும் அற்ப விஷயங்கள்:

    "தந்தை அன்பளிப்பாகக் கொடுத்த வீட்டை, பரம்பரை வழியாக வந்த சொத்து எனக் குறிப்பிட்டது போன்ற மிகச் சிறிய நுணுக்கமான விஷயங்களை பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துமே ஆதாரமற்ற கற்பனையான ஊகங்கள்."

    வாக்கு வித்தியாசம்:

    பெரம்பூர் தொகுதியில் விஜய் 1,20,365 வாக்குகள் பெற்று, 53,715 வாக்குகள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளார். இப்படிப்பட்ட மாபெரும் மக்கள் தீர்ப்பை அற்பக் காரணங்களைச் சொல்லி செல்லாது என அறிவிக்க முடியாது.

    -வழக்கின் தற்போதைய நிலை

    முதல்வர் விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் கோபால் சங்கரநாராயணன், பிரஞ்சல் அகர்வால் மற்றும் தீக்ஷிதா கோஹில் ஆகியோர் இரண்டு நாட்களாக விரிவான வாதங்களை முன்வைத்தனர். மனுதாரர் தரப்பு வாதங்களைக் கேட்பதற்காக, நீதிபதி வி. லட்சுமிநாராயணன் வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளார். தேர்தல் ஆணைய விதிகளின் கீழ் வேட்புமனுவில் உள்ள சிறிய பிழைகள் தேர்தலை பாதிக்குமா என்பது குறித்து நீதிமன்றம் எடுக்கும் முடிவு தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

    English Summary

    Madras HC Hears CM Vijay’s Plea to Dismiss Perambur Election Petition Over Asset Details