இப்படி குறுக்கு வழியில் வந்த இவங்கதான் சட்டத்தை பாதுகாப்பாங்களா? தவெக அரசின் முடிவை விளாசிய கோர்ட்

  • சென்னை: இப்படி குறுக்கு வழியில் பதவிக்கு வருபவர்கள், நாளைய தினம் ஏழை மக்களுக்கு நியாயம் வாங்கித் தருவார்களா? அல்லது நாட்டின் சட்டத்தைப் பாதுகாப்பார்களா?... சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி முருகன் எழுப்பிய இந்த ஒற்றைக் கேள்வி, ஒட்டுமொத்த தமிழகத்தின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது.

    Advertisement

    கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் லட்சக்கணக்கில் பணம் கைமாறிய விவகாரத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    பொதுமக்களின் காவலர்கள் யார்?

    ஒரு சாதாரண மனிதனுக்குப் பாதிப்பு ஏற்படும்போது, அவன் நீதி கேட்டு நீதிமன்றத்தை நாடுகிறான். பணம் படைத்த நபர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் பல லட்சங்களைச் செலவழித்துப் பெரிய வழக்கறிஞர்களை வைத்துக் கொள்வார்கள். ஆனால், கூலித் தொழிலாளி, ஏழை எளிய மக்கள் மற்றும் அநீதிக்கு ஆளான பெண்களுக்காக நீதிமன்றத்தில் அரசே ஒரு வழக்கறிஞரை நியமிக்கும். அவர்தான் அரசு வழக்கறிஞர்.

    அரசுக்குச் சொந்தமான நிலங்கள், ஏழை மக்களின் உரிமைகள், குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி என அனைத்தையும் நீதிமன்றத்தில் பெற்றுத் தரும் பெரும் பொறுப்பு இந்த அரசு வழக்கறிஞர்களுக்கு உண்டு. அப்படிப்பட்ட முக்கிய நாற்காலிகள் காசுக்கு விற்கப்பட்டால், அங்கே நீதி எப்படி உயிரோடு இருக்கும்?

    Advertisement

    வழக்கும் பின்னணியும்

    கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகன் ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக அவர் மனுவில் கூறினார்.

    குறிப்பாக, அரசு வழக்கறிஞர் பதவிக்கு ஒருவரிடம் ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்கப்பட்டதாகவும், பெண் வழக்கறிஞர் என்பதால் ரூ.2 லட்சம் குறைத்துத் தருமாறு பேரம் பேசிய ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஹரித் சபரி நீதிமன்றத்தில் வாதிட்டார். இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் (DVAC) புகார் அளித்தும் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்பதால், நீதிமன்றமே தலையிட வேண்டும் என்று மனுதாரர் கோரினார்.

    Advertisement

    நீதிமன்றத்தின் கோபமும் சரமாரி கேள்விகளும்

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி முருகன், விவரங்களை அறிந்து கடும் கோபமடைந்தார். அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கக் கூடுதல் கால அவகாசம் கேட்டபோது, நீதிபதி சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்:

    அரசு வழக்கறிஞர் பணியை யார் விற்பனை செய்தது?
    லஞ்சம் கொடுத்துவிட்டுத்தான் இவர்கள் அரசு வழக்கறிஞர்களாக வர வேண்டுமா?
    லஞ்சம் வாங்குவது எந்த அளவிற்குப் பெரிய குற்றமோ, அதே அளவிற்கு லஞ்சம் கொடுப்பதும் குற்றம். எனவே, லஞ்சம் வாங்கியவர் மற்றும் கொடுத்தவர் என இரண்டு தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். இப்படி குறுக்கு வழியில் பதவிக்கு வருபவர்கள், நாளைய தினம் ஏழை மக்களுக்கு நியாயம் வாங்கித் தருவார்களா? அல்லது நாட்டின் சட்டத்தைப் பாதுகாப்பார்களா?

    Advertisement

    நீதிபதி எழுப்பிய இந்தக் கேள்விகள், நீதிமன்ற அறையில் இருந்த வழக்கறிஞர்களையும் அரசுத் தரப்பையும் நிலைகுலைய வைத்தன.

    எளிய மனிதனின் கவலை

    நீதிபதி சுட்டிக்காட்டியது போல, ஒரு வழக்கறிஞர் லட்சக்கணக்கில் கடன் வாங்கியோ அல்லது சொத்தை விற்றோ லஞ்சம் கொடுத்து அரசு வழக்கறிஞர் பதவிக்கு வந்தால், அவர் நீதிமன்றத்தில் அமர்ந்ததும் எதைச் சிந்திப்பார்?

    பாதிக்கப்பட்ட ஏழைக்கு நியாயம் வாங்கித் தருவதை விட, தான் கொடுத்த லஞ்சப் பணத்தை எப்படி வழக்குகளில் பேரம் பேசித் திரும்ப எடுப்பது என்பதில்தானே அவரது கவனம் இருக்கும்? குற்றம் செய்த குற்றவாளிகளிடமே சமரசம் செய்துகொண்டு ஏழைகளின் வழக்குகளைக் காவு கொடுக்கும் ஆபத்து ஏற்படாதா? சட்டத்தைக் காக்க வேண்டிய இடத்திலேயே லஞ்சம் நுழைந்தால், பாமர மனிதன் நியாயத்திற்காக வேறு எங்கு செல்வான்?

    Advertisement

    லஞ்ச ஒழிப்புத்துறைக்குக் கிடுக்கிப்பிடி

    "புகார் மனு அனுப்பப்பட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை ஏன் இன்னும் விசாரணை நடத்தவில்லை? புகார் வந்தால் விசாரிக்க மாட்டீர்களா?" என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த லஞ்சப் புகார் மனு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உடனடியாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    நேர்மையான முறையில் பல ஆண்டுகள் படித்துப் பயிற்சி பெற்ற எத்தனையோ திறமையான இளம் வழக்கறிஞர்கள் வாய்ப்பின்றி வெளியே நிற்கும்போது, பணமும் செல்வாக்கும் உள்ளவர்கள் அரசுப் பதவிகளை ஏலம் எடுப்பது சமூக நீதிக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் மிகப்பெரிய சவாலாகும். இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பாரபட்சமின்றி விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    English Summary

    Madras HC Madurai Bench Expresses Shock Over Govt Advocates Bribery Case, Orders DVAC Inquiry