வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி!

  • சென்னை: அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி மே 10 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்டு, மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழத்து பாடி துவங்கும் மரபை மீட்டெடுக்க உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    Advertisement

    அந்த மனுவில், 1891 ஆம் ஆண்டு தமிழறிஞர் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த் தாய் வாழ்த்தை பாடியே தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள் துவங்கப்படுவதும், நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம் பாடி நிறைவு செய்வதும் பல ஆண்டுகளாக மரபாக பின்பற்றப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகே, தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படுவதாக மனுவில் குற்றமசாட்டியுள்ளார்.

    அரசு நிகழ்ச்சியை வந்தே மாதரம் பாடியே துவங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28ஆம் தேதி பிறப்பித்து சுற்றிக்கையில், மாநில பாடலை பாடி அரசு நிகழ்ச்சியை துவங்க எந்த தடையையும் விதிக்கவில்லை; தமிழ்த் தாய் வாழ்த்து பாடுவது வெறும் சடங்கு அல்ல, அது தமிழர்களின் உணர்வு, கலாச்சாரம் மற்றும் அடையாளமாக உள்ளது; பல தலைமுறைகளாக அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியே தொடங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    வந்தே மாதரத்துக்கு எதிராகவோ, தேசிய கீதத்துக்கு எதிராகவோ இந்த வழக்கை தொடரவில்லை எனக் கூறியுள்ள மனுதாரர், எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் இந்த கலாச்சார மோதலை தவிர்க்கும் வகையில், தமிழ்த் தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கு தகுந்த நிர்வாக அறிவுறுத்தல்களை பிறப்பிக்க வேண்டும் என அரசுகக்கு உத்தரவிடும்படி கோரினார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, மத்திய அரசின் சுற்றறிக்கை தமிழகத்துக்கு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்ற நிலையில் சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யாமல் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பினர்.

    Advertisement

    இதையடுத்து, மனுவை திரும்பப்பெற்று மத்திய அரசு சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வைத்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், மனுவை திரும்பப் பெறவும், மத்திய அரசின் சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு தொடரவும் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

    English Summary

    Chennai High Court has issued an order granting permission to file a case challenging the Union Ministry of Home Affairs circular mandating that the song 'Vande Mataram' be sung first at government functions.