ராதாபுரம் மக்களுக்கு அநீதி.. வேலியே பயிரை மேயலாமா.. உச்ச நீதிமன்றம் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி

  • சென்னை: தமிழக முன்னாள் சட்டசபை சபாநாயகர் அப்பாவுவின் 2016 ராதாபுரம் தொகுதி தேர்தல் முடிவுகள் வழக்கை 6 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் வைத்து விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தேர்தல் வழக்குகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அப்படி செய்யாமல் ராதாபுரம் மக்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    2016 சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் அப்பாவு, அதிமுக சார்பில் இன்பதுரை போட்டியிட்டனர். இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2019 அக்டோபர் 4 ஆம் தேதி மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதன் முடிவுகளை அறிவிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

    Advertisement

    இந்த வழக்கை பலமுறை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், கடந்த மே 26 ஆம் தேதி முடித்துவைத்தனர். பிறகு தேர்தல் முடிவு வழக்கை விசாரிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுமதி வழங்கியது. நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், 2016 தேர்தலில் 103 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வெற்றி பெற்றார்.
    இன்பதுரையின் தேர்தல் வெற்றி செல்லாது. இதற்காக பெற்ற அனைத்து சலுகைகளையும் அவர் இழக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்

    வழக்கு விசாரணையின்போது நீதிபதி ஜெயச்சந்திரன், தேர்தல் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு வழக்கில்
    கூறியிருந்தது. நீதிமன்றங்களே தங்களின் உத்தரவுகளை பின்பற்றாமல் இருக்கிறது. 75 வருடங்களுக்கு முன்பு நாம் சுதந்திரம் பெற்றபோது இருந்த சர்வாதிகார நாடுகளைப் போல இந்தியாவும் செல்லக்கூடும் என்ற அச்சம் ஏற்படுகிறது. 10 வருடங்களுக்கு பிறகுதான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. இதை வெறும் துரதிர்ஷ்டம் என்று கூறிவிட முடியாது.

    Advertisement

    ராதாபுரம் தொகுதி வாக்காளர்களுக்கு நீதியின் பெயரில் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 86(7)-ன் படி, தேர்தல் வழக்குகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். இந்த வழக்கில் அது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகத்தின் பெருமையை காக்க நீதித்துறை அரசுத் துறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். தேர்தல் வழக்குகளை காலதாமதமின்றி முடிக்காதது ஜனநாயகத்தையும் வாக்குரிமையின் உண்மையான அர்த்தத்தையும் பாதிக்கும்" என்று கூறினார்.

    English Summary

    The Madras High Court declared DMK leader M. Appavu as the rightful winner of the 2016 Radhapuram Assembly election and set aside AIADMK candidate I.S. Inbadurai's victory. Justice G. Jayachandran also expressed concern over the prolonged delay in resolving the election dispute, stating that such delays could undermine democratic values and voter rights.