இப்போதைக்கு எஸ்கேப்..தப்பித்தது அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள் தலை! ’அக்ரி’ வழக்கில் ஹைகோர்ட் ட்விஸ்ட்!

  • சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் வென்ற பிறகு தங்கள் பதவியை ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்ய விரும்பினால் அவரை தொடர்ந்து பதவியில் இருக்கும்படி நிர்பந்திக்க முடியாது என சபாநாயகர் தரப்பு கூறிய நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது. அப்போது தவெக அரசு, கடந்த மே 13 ஆம் தேதி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்த போது, கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    Advertisement

    இந்நிலையில், அவர்கள் கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததாக 25 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், நான்கு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து, மீதமுள்ள 21 எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கோரி கடிதம் அளித்துள்ளதால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை கோரிய மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகருக்கு கடிதம் அளித்தார். இதை ஏற்று சபாநாயகர், 21 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளை கைவிடுவதாக சபாநாயகர் உத்தரவ பிறப்பித்தார்.

    Advertisement

    இந்த ரத்து செய்யக் கோரி, வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய உள்ளதாக தெரிவித்ததை அடுத்து மனு வாபஸ் பெறப்பட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அந்த வழக்கு முடிவுக்கு வந்த நிலையில் சட்டமன்றத்தில் அதிமுகவின் கொறடாவான தனது உத்தரவை மீறி தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 6 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது அவர்களின் ராஜினாமா முடிவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஏற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அதிமுகவின் கொறடாவான அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், தேசிய மக்கள் சக்தி கட்சி என்று அமைப்பின் தலைவர் ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    Advertisement

    இந்த வழக்கு தலைமை நீதிபதி அரவிந்த் தர்மதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய தலைமை அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுகவின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சபாநாயகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்," ராஜினாமா செய்தவர்களிடம் தாங்களாகவே பதவி விலகிக் கொண்டார்களா என விசாரணை நடத்தி அந்த விசாரணையில் திருப்தி ஏற்பட்டதால் தான் ராஜினாமா ஏற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த விசாரணை வெறும் சம்பிரதாயமல்ல. அரசியல் சாசனத்தின் கடமை. ஆனால் உரிய முறையில் விசாரணை நடத்தப்படவில்லை" என குறிப்பிட்டனர்.

    Advertisement

    மேலும்," ராஜினாமா கடிதம் அளித்த சில நிமிடங்களில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இது சம்பந்தமாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் முழுமையான விசாரணை நடத்தாமல் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் என கூறினர்.

    சபாநாயகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதால் மட்டுமே தகுதி நீக்க நடவடிக்கை செல்லாமல் போய்விடாது ராஜினாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியாகும். ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்ய விரும்பினால் பதவி வகிக்க வேண்டும் என சபாநாயகர் நிர்ப்பந்திக்க முடியாது. ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்யும் போது சபாநாயகர் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அரசியல் சாசன கடமையை மீறியதாக கருதப்படும் என கூறினார்.

    Advertisement

    அதே நேரத்தில் ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்," எம்எல்ஏவாக இருந்து சலுகைகளை பெற்றுக்கொண்டு வேறு கட்சிக்கு ஆதரவளித்தால் தான் ஊழல் என கருதப்படும். பதவியை ராஜினாமா செய்து விட்டு வேறு கட்சியில் இணைவது ஜனநாயக அரசியல் கொடுத்திருக்கும் உரிமை. ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட பிறகு தகுதி நீக்க நடவடிக்கையை தன்னிச்சையாக செயல்படாமல் போய்விடும் நாங்கள் சுய விருப்பத்தின்படியே ராஜினாமா செய்தோம்" என வாதிட்டனர்.

    மேலும்," எங்கள் ராஜினாமா கடிதம் மூலமாகவோ அல்லது வேறு நபர்கள் மூலமாக இருந்தால் தான் சபாநாயகர் விசாரணை நடத்த வேண்டும். நாங்கள் நேரிலேயே கைப்பட கடிதம் எழுதி ராஜினாமா செய்துள்ளோம். அதனால் எங்கள் மீதான உண்மைத்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது என வாதிட்டனர். இதே போல சட்டப்பேரவை செயலர் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.

    English Summary

    Madras High Court has reserved its verdict on petitions challenging the Speaker's acceptance of resigned AIADMK MLAs.