மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

  • சென்னை: லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினுக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் ரூ.457 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்ட விவகாரத்தில், அமலாக்கத் துறை (ED) பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    சிக்கிம் மாநில லாட்டரி விற்பனையில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், அதன் மூலம் மாநில அரசுக்கு சுமார் ரூ.910 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக கடந்த 2009-2010 காலகட்டத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டின் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

    Advertisement

    இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டது. அதன்படி மார்ட்டின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்புடைய பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

    விசாரணையின் தொடர்ச்சியாக, மார்ட்டினுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ரூ.457 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கம் செய்தது. பின்னர், அந்த நடவடிக்கையை அமலாக்கத் துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் உறுதி செய்தது.

    இதனை எதிர்த்து மார்ட்டின் மற்றும் அவரது நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், சொத்துகள் முடக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து, அவற்றை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

    Advertisement

    இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. மனுக்களுக்கு ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தனர்.

    English Summary

    The Madras High Court has directed the Enforcement Directorate (ED) to respond within six weeks to petitions filed by lottery businessman Martin challenging the attachment of assets worth ₹457 crore. The case is linked to an alleged lottery scam that reportedly caused a loss of ₹910 crore to the Sikkim government.