அமைச்சர்கள் செங்கோட்டையன், மரியவில்சனுக்கு எதிரான தேர்தல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு

  • சென்னை: ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சர் மரியவில்சனின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி, அந்த தொகுதி வாக்காளர் மருதுகணேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் மரிய வில்சன் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதே போன்று கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கில் அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், விசிக, ஐயுஎம்.எல் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் வெவ்வேறு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாகவும், அதில் முரண்பாடுகள் உள்ளதாலும் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டது.

    Advertisement

    தேர்தல் வழக்கு

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதல்வர் விஜய் முறையான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இதே போன்று சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரும், தற்போதைய நிதி அமைச்சருமான மரிய வில்சன் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி அந்த தொகுதி வாக்காளர் மருதுகணேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    திருவெறும்பூர் தொகுதியில் வெற்றிப் பெற்ற தவெக எம்எல்ஏ எஸ்.விஜயகுமார் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், திண்டுக்கல் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐபி செந்தில்குமாரின் வெற்றியை செல்லாது என தவெக வேட்பாளர் நாசிர் ராஜா என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்து இருந்தனர்.

    Advertisement

    பதில் அளிக்க உத்தரவு

    இதேபோன்று திருவள்ளூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ டாக்டர் டி அருண்குமார் வெற்றியை எதிர்த்தும், மொடக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ டி. சண்முகம் வெற்றியை எதிர்த்தும், பர்கூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஆர்.சி. கோவிந்தராஜன் வெற்றியை எதிர்த்தும் தனித்தனி தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி கே குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போத் இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, "இவ்வழக்குகளில் எதிர்மனுதாரர்களாக இருக்கின்ற அமைச்சர் மரிய வில்சன், டி அருண்குமார் உள்ளிட்ட 6 எம்.எல்.ஏக்களும் 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார். இதே போன்று கோபிசெட்டிபாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏவும், அமைச்சருமான செங்கோட்டையன் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி அதிமுகவை வேட்பாளர் வி. பி. பிரபு என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    Advertisement

    கால அவகாசம்

    இந்த வழக்கோடு, மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம் வெற்றி பெற்றதை எதிர்த்து வாக்காளர் கமலக்கண்ணன் தொடர்ந்த வழக்கு, ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வெற்றியை எதிர்த்து வாக்காளர் ராமமூர்த்தி ஆகியோர் தனித்தனியாக தொடர்ந்திருந்த தேர்தல் வழக்குகள் நீதிபதி ஜி கே இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதி, "மனுக்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கால அவகாசம் வழங்கி வழக்குகளை வெவ்வேறு தேதிகளுக்கு ஒத்தி வைத்தார். மேலும், இந்த தேர்தல் வழக்குகள் ஒவ்வொரு புதன்கிழமையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்தார். இதில், முன்னாள் அமைச்சர் ரகுபதி பெற்ற வெற்றியை எதிர்த்தும், தவெக எம்.எல்.ஏ., சீனிவாச சேதுபதி வெற்றியை எதிர்த்தும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் அடங்கும்.

    English Summary

    Madras High Court directed Ministers Sengottaiyan and Maria Wilson to file their responses in petitions challenging their victory in the Tamil Nadu Assembly elections. The cases question the validity of their election and will be heard further after replies are submitted.