டாஸ்மாக் கடைகள் மூடல்.. தமிழக அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது.. சென்னை ஹைகோர்ட் பாராட்டு

  • சென்னை: மதுக்கடைகளை மூடும் தமிழக அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தூர விதி பிரச்சனை இல்லை என்றாலும், மக்கள் நலன் கருதி மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விஜய் முதல்வராக பதவியேற்றதும், கோவில், கல்வி நிலையங்கள் அருகே இருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டன.

    Advertisement

    தமிழக முதல்வராக பொறுபேற்ற விஜய் கடந்த 12 ஆம் தமிழகத்தில் கோவில்கள், கல்வி நிலையங்கள் அருகே இருக்கும் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகள் 2 வாரங்களுக்குள் மூடப்படும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து முதல்கட்டமாக 500-க்கு மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து மதுக்கடைகளை மூடும் பணிகளானது நடந்து வருகிறது.

    Advertisement

    இந்த சூழலில், மதுக்கடைகளை மூடும் உத்தரவினை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை ஆர்.ஏ. புரம், வேளச்சேரியில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு கடைகளை வாடகைக்கு கொடுத்துள்ள சரவணன், மதியரசன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவில், கடைகளை டாஸ்மாக் நிறுவனத்துக்கு வாடகைக்கு விட்டு, 11 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு வந்தது.

    கடைகளை மதுபான கடைகளாக மாற்றுவதற்காக அதிக அளவில் பணம் செலவு செய்து இருக்கிறோம். உள் அலங்கார ஏற்பாடுகள் செய்து இருக்கிறோம். இப்போது இந்த கடைகளை மூடுவதால் எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் படி, மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்களில் இருந்து 50 மீட்டர் தூரத்துக்கு மதுபான கடைகள் அமைக்கப்படக் கூடாது என்று தான் கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    எனவே 500 மீட்டர் தூரத்துக்குள் உள்ள கடைகளை அகற்றியது தன்னிச்சையானது. இந்த உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ''முந்தைய ஆட்சி காலத்தில் இடத்தை குத்தகைக்கு கொடுத்தவர்களுக்கு உரிய தொகையை டாஸ்மாக் நிர்வாகம் திருப்பிக் கொடுத்துவிடும். எனவே புதிய அரசின் கொள்கை முடிவை எதிர்த்து இதுபோன்று வழக்கு தொடர முடியாது'' என வாதிட்டார்.

    அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர், அரசின் முடிவில் தலையிட முடியாது என்ற ஐகோர்ட்டு உத்தரவினை வேறு ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. எனவே இந்த வழக்கில் என் கட்சிக்காரரை ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும்'' என்றார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக அரசின் இந்த மதுக்கடைகளை மூடும் நடவடிக்கையை சரி என்கிறீர்களா? என்றனர். அதற்கு ஆமாம் என அவர் பதில் அளித்தார்.

    Advertisement

    இதையடுத்து, "தமிழக அரசின் முடிவு குறித்து மனுதாரர்கள் கேள்வி எழுப்ப முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், 'டாஸ்மாக் கடைகளை மூடிய அரசின் முடிவு நல்ல முடிவு. முதல்வரின் முடிவுக்கு டாஸ்மாக் கட்டுப்பட வேண்டும்'' என்று கருத்து கூறினார்.

    "கடைகளை மூடுவது பலருக்கு நன்மைகளை தந்தாலும், மனுதாரர்கள் போன்ற பாதிக்கப்பட்டோருக்கு இழப்பு தான். கடை திறக்கப்படாத நாட்களுக்கான தொகையினை திருப்பி அளிப்பது தொடர்பாக அரசு முடிவு எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்கலாம் என உச்ச நீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு 2 வாரங்களில் பரிசீலித்து முடிவு எடுக்கலாம்" என்றும் உத்தரவிட்டது.

    English Summary

    Madras High Court welcomed the Tamil Nadu government’s decision to close TASMAC liquor shops near temples and educational institutions. The court observed that even without distance rule violations, the government can shut liquor outlets considering public welfare and social concerns.