சென்னை: ஒரு காலத்தில் சமூக ரீதியிலான அநீதி எங்கு நடந்தாலும் களத்திற்கு முதல் ஆளாக ஓடிவந்து குரல் கொடுத்தவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணித் தலைவரான வன்னியரசு. காவல் நிலைய மரணங்கள், மனித உரிமை மீறல்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்முறைகள் என எது நடந்தாலும், மைக்கை பிடித்துக் கொண்டு காவல்துறையையும் ஆளும் அரசையும் கிழித்துத் தொங்கவிட்ட அவரது முழக்கங்கள் இன்னும் தமிழ்நாட்டு மக்களின் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால் இன்று? அதே வன்னியரசு தமிழக அமைச்சரவையில் 'சமூக நீதித்துறை' அமைச்சராக அமர்ந்துள்ளார். அதிகாரம் கைகளுக்கு வந்ததும், பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரை அவர் மறந்துவிட்டாரா என்ற வேதனையான கேள்விதான் தற்போது மதுரை முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் என்ற பட்டியலின இளைஞர், காவல் துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. ஆகாஷின் காலை இரும்பு கம்பியால் அடித்து உடைத்து சித்திரவதை செய்து கொன்றதாக சிபிசிஐடி குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்தது. தன் மகனை பறிகொடுத்துவிட்டு, அவனது உடலைக்கூட வாங்க மறுத்து மாதக்கணக்கில் போராடிய ஒரு ஏழை குடும்பம் அது. இந்த நிலையில், நேற்று தமிழக முதலமைச்சர் விஜய் மதுரைக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தந்தார். முதலமைச்சர் வருகிறார் என்ற ஒரே காரணத்திற்காக, அநீதியை எதிர்த்து போராடி வரும் ஆகாஷின் குடும்பத்தினரை போலீசார் அவர்களது வீட்டிலேயே சிறைவைத்துள்ளனர். வீட்டைச் சுற்றி காவல் வாகனங்களை நிறுத்தி, யாரையும் வெளியே செல்லவிடாமல், யாரையும் உள்ளே விடாமல் அச்சுறுத்தியுள்ளனர். நீதி கேட்டு மனு கொடுக்க நினைத்த ஒரு குடும்பத்தை, தன் பிள்ளையை பறிகொடுத்த தாய் தந்தையை, குற்றவாளிகளைப் போல வீட்டுக்காவலில் அடைப்பது எந்த விதத்தில் நியாயம்? இந்த இடத்தில் தான் மக்கள் அமைச்சர் வன்னியரசுவை நோக்கி விரல் நீட்டுகிறார்கள். கடந்த காலங்களில் இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் நடந்தால், "காவல்துறை அராஜகம் ஒழிக", "எளிய மக்களின் உரிமைகளை நசுக்காதே" என்று அரசுக்கு எதிராக அறிக்கை போரும், ஆர்ப்பாட்டமும் நடத்திய வன்னியரசு, இப்போது என்ன செய்கிறார்? கூட்டணி அரசில் தனக்குக் கிடைத்த அமைச்சர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தன் சொந்த மக்களின் கண்ணீரை கண்டுகொள்ளாமல் கண்களை மூடிக் கொண்டு மௌனம் காக்கிறாரா? ஆகாஷின் குடும்பம் சென்னை தலைமைச் செயலகத்திற்குச் சென்று முதலமைச்சரின் காரை மறித்து மனு கொடுக்க முயன்றபோதும் சரி, இப்போது மதுரையில் அவர்கள் சிறைபிடிக்கப்பட்டபோதும் சரி, சமூக நீதியைப் பேசும் இந்த அமைச்சரிடம் இருந்து ஒரு சிறு கண்டனக் குரல் கூட வெளிவரவில்லை. "நாங்கள் அதிகாரத்திற்குச் செல்வது எளிய மக்களுக்காக குரல் கொடுக்கத்தான்" என்று மேடைகளில் பேசுவது எளிது. ஆனால், அந்த அதிகார நாற்காலியில் அமர்ந்த பிறகு, காவல்துறையின் அப்பட்டமான அத்துமீறலைக் கண்டும் காணாமல் இருப்பதுதான் வெட்கக்கேடான அரசியல். ஒரு அப்பாவி இளைஞன் காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் ஜாமீனில் வெளியே வருகிறார்கள். ஆனால், கொல்லப்பட்ட இளைஞனின் குடும்பமோ சொந்த வீட்டிலேயே கைதிகளைப் போல சிறைவைக்கப்படுகிறது. இதைவிட ஒரு கொடூரமான முரண் இருக்க முடியுமா? இந்த அநீதியை ஆளும் கூட்டணி அரசின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், அதன் அமைச்சரான வன்னியரசுவும் தட்டிக் கேட்காமல் அமைதி காப்பது எளிய மக்களுக்கு செய்யும் துரோகம் அன்றி வேறென்ன? அரசியல் லாபங்களுக்காகவும், கூட்டணி நலனுக்காகவும் மனித உரிமைகளையும் மக்களின் நீதியையும் அடகு வைத்துவிட்டீர்களா வன்னியரசு அவர்களே? அதிகாரம் இல்லாதபோது களத்தில் நின்று போராடிய வன்னியரசு எங்கே? அதிகாரம் வந்தவுடன் வாய்மூடி மௌனியாகிவிட்ட இந்த அமைச்சர் வன்னியரசு எங்கே? மக்கள் எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதிகார மௌனம் ஒருபோதும் நீதியை புதைத்துவிட முடியாது.என்ன நடந்தது மதுரையில்?
அன்று புயல்... இன்று அமைதி...
வெட்கக்கேடான அரசியல் சமரசம்
மக்கள் கேட்கும் ஒரே கேள்வி