மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்தும் கட்சி அடுத்து ஆட்சியை பறிகொடுக்குமா?

  • சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை 1963-இல் காங்கிரஸ் அரசு நடத்தியது. அதன்பிறகு 1967-இல் நடந்த தேர்தலில் அது ஆட்சியைப் பறிகொடுத்தது; அதன்பின் இன்றுவரை ஆட்சிக்கே வரவில்லை. 1974-இல் திமுக கும்பாபிஷேகம் நடத்தியது; அந்த கட்சியும் அதன்பிறகு 1977-இல் நடந்த தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்தது. அதன்பின் 1995-ஆம் ஆண்டு அதிமுக நடத்தியது; ஆனால் 1996 தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அதேபோல் 2009-இல் திமுக நடத்தியது; அந்த கட்சியும் 2011-ஆம் ஆண்டு தேர்தலில் மோசமாகத் தோற்றது. அதன் பின் அதிமுக கும்பாபிஷேகம் நடத்தவில்லை. ஆட்சி இழக்கும் என்ற 'செண்டிமெண்ட்' காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். இந்த வருடம் தவெக நடத்துகிறது; பொறுத்திருந்தே இதுபற்றிப் பார்க்க வேண்டும் என்று நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

    Advertisement

    இதுபற்றி நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவு மிகப்பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளியிட்ட பதிவில், "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கான கும்பாபிஷேகத்தைத் தற்போதைய தவெக அரசு அறிவித்துள்ளது. சுவாரஸ்யமாக, 1963-ஆம் ஆண்டு முதல் ஒரு குறிப்பிட்ட போக்கு காணப்படுகிறது. அதாவது, எந்தவொரு ஆளும் அரசு இக்கோயிலின் கும்பாபிஷேகத்தை அறிவித்து அதை நடத்தி முடித்ததோ, அந்த அரசு அடுத்த தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை.

    Advertisement

    1963, 1974, 1995 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றன; ஒவ்வொரு முறையும், அந்த விழாவை நடத்திய அரசு அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், அந்தத் தேர்தல்களில் ஆளும் கட்சியால் சட்டமன்றத்தில் 51 இடங்களைக் கூட எட்ட முடியவில்லை. மதுரையைச் சேர்ந்த ஒருவராக, இந்தப் போக்கை நான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். இருப்பினும், இதற்கான சரியான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.

    ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இது முற்றிலும் மூடநம்பிக்கையாகும். தஞ்சைப் பெரிய கோயிலைச் சுற்றிலும் இப்படி ஒரு வதந்தி ஓடிக்கொண்டிருக்கிறது. தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் செல்லும் அரசியல்வாதி பதவியை இழப்பார் என்று பரவிய கட்டுக்கதை காரணமாக, அரசியல்வாதிகள் அந்தக் கோயில் பக்கமே போவதில்லை. ஏனெனில், தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் கேரள அந்தகன் கோபுரம் (கேரளாந்தகன் திருவாசல்) அல்லது முதன்மை வாசல் வழியே நுழையும் அரசியல்வாதிகள், முதலமைச்சர்கள் அல்லது முக்கியத் தலைவர்கள் தங்களது பதவியை இழப்பார்கள் அல்லது ஆட்சியை இழப்பார்கள் என்று அரசியல்வாதிகளே நம்புகிறார்கள்.

    Advertisement

    கோயிலைக் கட்டிய மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழன், கோயில் கட்டி முடிக்கப்பட்ட சில காலங்களிலேயே மறைந்தார் என்றும், அதற்குப் பிறகு சோழ மன்னர்களின் தலைநகரம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றப்பட்டது என்றும் வதந்தியைக் கிளப்பிவிட்டார்கள். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா திட்டமிடப்பட்டது. ஆனால், "கோயிலுக்குள் சென்றால் பதவி போய்விடும்" என்ற பயத்தால் எம்.ஜி.ஆர் முதன்மை நுழைவாயில் வழியாகச் செல்லாமல், பக்கவாட்டு வாசல் வழியாக உள்ளே சென்றார் என்ற பேச்சு பரவியது.

    அதேபோல் 2010-ஆம் ஆண்டு தஞ்சைப் பெரிய கோயிலின் 1000-வது ஆண்டு பெருவிழாவை அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி மிகப்பிரமாண்டமாகக் கொண்டாடினார். அப்போது அவர் 'கேரள அந்தகன் கோபுரம்' (கேரளாந்தகன் திருவாசல்) வழியாக நுழையாமல், பக்கவாட்டில் அமைக்கப்பட்ட சிறப்பு நுழைவாயில் வழியாகவே அழைத்துச் செல்லப்பட்டதும் விமர்சனமானது.

    Advertisement

    அப்படித்தான் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் குறித்தும் வதந்தியைக் கிளப்பிவிட்டுள்ளார்கள். கோயில் கும்பாபிஷேகம் என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய ஒன்றாகும். அதற்கும் ஆட்சியாளர்கள் ஆட்சியைப் பறிகொடுப்பதற்கும் சம்பந்தமே கிடையாது. நம் மக்களுக்குச் சில விஷயங்கள் ஒரே மாதிரி நடந்தால், அதனை முடிச்சுப் போட்டுவிடுவார்கள்; அதை ஆழமாக நம்பவும் தொடங்குவார்கள். அப்படித்தான் இதையும் நம்புகிறார்கள்.

    தமிழ்நாட்டில் ஒரு விசித்திரமான விஷயம் தொடர்கிறது. தமிழ்நாட்டில் போக்குவரத்து வாகன எண் கூட்டுத்தொகை 8-இல் வரவே வராது. அதாவது எந்தப் போக்குவரத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலக (RTO) எண்ணும் 8 என்ற கூட்டுத்தொகையில் வராது. TN 08 தொடங்கி, TN 17, TN 26, TN 35, TN 44, TN 53, TN 62, TN 71 என 8-இல் முடியும் எந்த எண்ணும் இன்றுவரை கிடையாது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

    English Summary

    Temple Consecration Myth : Will the ruling party that conducts the Madurai meenakshi amman temple kumbabishekam, lose power in Tamil Nadu thereafter?