சென்னை: மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தி தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். இந்நிலையில், தவெக வேட்பாளர் கட்சி மாற்ற விவகாரம், பணப் பரிமாற்ற விவகாரம், இடைத்தேர்தலில் தவெகவை ஆதரிப்பது குறித்த நிலைப்பாடு உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் குறித்து சுகந்தி தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகத்தில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.கவில் இணைந்தார். வரும் இடைத்தேர்தலில் தவெக சார்பில் மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் போட்டியிடுகின்றனர்.
மதுராந்தகத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தி ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மதுராந்தகம் அரசியல் களம் இடது சாரிகளுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கக்கூடிய களமாக உள்ளது. இந்த தேர்தல் தொகுதி மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல் என்பதை மக்கள் சரியாகப் புரிந்து வைத்துள்ளனர். கடந்த பொதுத் தேர்வில் அதிமுக சார்பில் தேந்த்தெடுக்கப்பட்ட மரகதம் குமரவேல் 20 நாட்களில் தனது பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து போட்டியிடுகிறார். கம்யூனிஸ்டுகள் தனியாக நிற்க வேண்டும் என்று எதிர்பார்த்த பலரும் பெரும் வரவேற்பை கொடுத்து வருகின்றனர். தேர்தல் ஆளும்கட்சிக்கு ஆதரவாக இருக்கும் என்பது பொய் பிம்பம். அதனை உடைத்தெறியும் மனநிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள். திமுக, அதிமுகவுக்கு மாற்று என்று சொல்லி ஆட்சிக்கு வந்த 20 நாட்களில் தவெகவினர் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியுள்ளனர். இது எப்படி மாற்றத்திற்கான அரசியலாக இருக்கும் என்பது தான் தொகுதி மக்களின் கேள்வியாக உள்ளது. மதுராந்தகம் மக்கள் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் எடுத்து வைப்பதற்கான வாய்ப்பாக இந்த தேர்தலைக் கருதுகிறோம் என்று கூறினார். மேலும், தவெக வேட்பாளர் கட்சி மாற்ற விவகாரம், இடைத்தேர்தலில் தவெகவை ஆதரிப்பது குறித்த நிலைப்பாடு, கடந்த தேர்தலில் தவெகவை ஆதரித்ததற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் சுகந்தி பதிலளித்துள்ளார். இதுதொடர்பான முழு வீடியோவை கீழே உள்ள யூடியூப் லிங்க்கை கிளிக் செய்து காணலாம்.