சென்னை: மதுராந்தகம் தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் முதல் இடம் வகிக்கிறது. திமுக 2ஆம் இடம் வகிக்கும் நிலையில், அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர் ,தற்போது பாதி வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்திருக்கும் நிலையிலேயே 10,000 என்ற வாக்கு வித்தியாசத்தை கடந்திருக்கிறார்.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து இருக்கிறார். தற்போது அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தவெக சார்பில் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் சுமார் 1 லட்சத்து 84 ஆயிரம் வாக்குகள் பதிவான நிலையில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 12 மணி நிலவரப்படி மரகதம் குமரவேல் சுமார் 39 ஆயிரத்து 521 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் திமுகவின் பரந்தாமனும், மூன்றாவது இடத்தில் கணித சம்பத்தும் இருக்கின்றனர். இந்த தேர்தலில் அதிமுகவின் மரகதம் குமரவேல், திமுகவின் பரந்தாமனுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் 11 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்றிருந்தார். இது 34.95% என்பது குறிப்பிடத்தக்கது. தவெக சார்பில் எழில் கேத்தரின் எழில்மலை போட்டியிட்ட நிலையில் 62,090 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்று தோல்வியடைந்தார். அவர் சுமார் 31.32% வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இருவருக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் 7194 ஆக இருந்தது. திமுக சார்பில் போட்டியிட்ட அமுலு பொன்மலர் 59 ஆயிரத்து 838 வாக்குகள் பெற்றிருந்தார். எழில் கேத்தரனிக்கும் அமுலு பொன்மலருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 3000க்குள் தான் இருந்தது. தற்போது மதுராந்தகத்தில் திமுக இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருக்கும் நிலையில், தமிழக வெற்றிக்கழகம் முதல் இடத்திலும், அதிமுக மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் கடந்த தேர்தலில் சுமார் 22 சுற்றுகளின் முடிவில் மரகதம் குமரவேல் 7000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி பாதி தான் நிறைவு பெற்றிருக்கும் நிலையில் 10,000 என்ற வாக்கு வித்தியாசத்தை மரகதம் குமரவேல் தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.