சென்னை: மதுராந்தகம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் கள நிலவரங்கள் நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருக்கிறது. 2 தொகுதிகளில் முதல் 3 இடங்களில் தமிழக வெற்றி கழகம், திமுக, அதிமுக இருக்கும் நிலையில், 4வது இடத்தை பிடிப்பதற்கு கம்யூனிஸ்டுகள், நாம் தமிழர் கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால் தேர்தலில் வெற்றி பெறுவோம் என முழக்கமிட்டு களத்தில் இறங்கிய நாம் தமிழர் கட்சியினர் மூன்றாவது இடத்துக்கு கூட வர முடியவில்லை.
பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் தமிழக அரசியல் களம் சென்று கொண்டிருக்கிறது. 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு அதிமுக - திமுக கூட்டணி அமைக்க திட்டமிட்டதாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் பலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
தேர்தல் வழக்குகள் காரணமாக கரூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் தற்போது மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று தற்போது வாக்கு எண்ணிக்கையானது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் நிலையில், தாராபுரத்தில் கள நிலவரம் மாறி மாறி இருக்கிறது. அங்கு தொடக்கத்தில் தமிழக வெற்றி கழகம் முன்னணியில் இருந்தது. பின்னர் அதிமுக சற்றே முன்னிலை வகிக்க தொடங்கி இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க இரண்டு தொகுதிகளிலும் திமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளில் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவை வென்றிருந்தது. இரண்டு தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. தற்போது அதிமுக வேட்பாளர்கள் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களாக களம் இறங்கி இருக்கின்றனர். சுகன்யாவும் பரந்தாமலும் தற்போது திமுகவின் சார்பில் போட்டியிட்டிருக்கும் நிலையில் அவர்கள் மூன்றாவது இடத்திலேயே தொடர்கின்றனர். இதற்கிடையே நாம் தமிழர் கட்சி வழக்கம் போல இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டது. மதுராந்தகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமனும், தாராபுரத்தில் கார்த்திகாவும் போட்டியிடுகின்றனர். தபால் வாக்கு எண்ணிக்கையின் போதும் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போதும் நாம் தமிழர் வேட்பாளர்கள் ஒற்றை இலக்க வாக்குகளை மட்டுமே பெற்று இருந்தனர். அடுத்தடுத்த சுற்றுகளில் இரட்டை இலக்கத்திலேயே அவர்களது வாக்குகள் இருந்தது. பின்னர் தான் அது 3 இலக்கமாக மாறியது. இந்த தேர்தலில் கம்யூனிஸ்டுகள் கூடுதலாக களத்தில் இறங்கிய நிலையில் தாராபுரத்தில் லட்சுமணனும் மதுராந்தகத்தில் சுகந்தியும் போட்டியிட்டனர். தற்போதைய கள நிலவரத்தின்படி, 4து இடத்தை பெறுவதற்கு நாம் தமிழர் கம்யூனிஸ்டுகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. என்று தான் சொல்ல வேண்டும். அதே நேரத்தில் கம்யூனிஸ்டுகள் தங்கள் வாக்கு வங்கியை சோதிப்பதற்காகவே களத்தில் இறங்கியதாக அறிவித்த நிலையில், இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என நாம் தமிழர் தம்பிகள் அடித்துச் சொல்லினர். குறிப்பாக தாராபுரம் கார்த்திகாவின் பிரச்சாரத்தில் அனல் பறந்தது. அதிமுக, தவெக திமுக எனும் மூன்று பெரும் கட்சிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு நாம் தமிழர் வெற்றி பெறும் என அவர் முழங்கினார். ஆனால் உலக முட்டை தினமான இன்று நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்துக்கு கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.