சென்னை: தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, இரு தொகுதிகளிலும் நாளை செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு இரு தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும், பின்னர் முதல்வர் பதவியை ஏற்ற நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அதிமுகவைச் சேர்ந்த சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 6 எம்எல்ஏக்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதனால் மொத்தம் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதுதவிர சுயேச்சைகள் உள்ளிட்ட மொத்தம் 28 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்த இடைத் தேர்தலில் தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த இடைத்தேர்தலில் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகின்றன. இதனால் இந்த இடைத் தேர்தலில் ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. வேட்பாளர்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சித் தலைவர்களும் மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், மதுராந்தகத்தில் செப்டம்பர் 25 தேதியும், தாராபுரத்தில் செப்டம்பர் 30-ம் தேதியும் பிரச்சாரம் செய்தார். இது மட்டுமல்லாமல் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திமுக, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களும், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கடைசி நாளான நேற்று தாராபுரம் சட்டசபை தொகுதியில் முதல்வர் விஜய் ரோட் ஷோ நடத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கடைசிநேர வீடியோ வெளியிட்டு வாக்கு சேகரித்தனர். தேர்தல் விதிமுறைகள் படி நேற்று மாலை 6:00 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இரு தொகுதிகளிலும் இருந்து வெளியூர்க்காரர்கள் வெளியேற்றப்பட்டனர். நேற்று மாலை 6 மணியிலிருந்து நாளை காலை 6 மணி வரை பிரச்சாரம் பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றில் தங்கி இருந்த நபர்கள் வெளியேற்றப்பட்ட நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி அதற்கு தேவையான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை இன்று காலையிலிருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கி இருக்கிறது. தேர்தல் நேரத்தில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.