சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் வேட்பு மனு பரிசீலனை நிறைவடைந்து இருக்கிறது. இன்று வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிவடைந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தாராபுரத்திலும், மதுராந்தகத்திலும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் ஏற்கனவே பிரச்சாரத்தை துவக்கி விட்ட நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.
தமிழகத்தில் மொத்தம் 7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், பரிசீலனை முடிந்துள்ளது.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று இறுதி நாள். இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மீண்டும் சத்யபாமா களமிறங்குகிறார். திமுக தரப்பில் சுகன்யாவும், அதிமுக தரப்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி தரப்பில் கார்த்திகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதே போல தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளரான லட்சுமணன் போட்டியிடுகிறார். மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதியில் அதிமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு தாவிய மதுராந்தகம் மரகதம் குமரவேல் மீண்டும் போட்டியிடுகிறார். திமுக சார்பில் எழும்பூர் முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதியில் 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் 28 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. சுனாலினி என்ற சுயேச்சை வேட்பாளர் தனது வேட்புமனுவை இன்று திரும்பப் பெற்றுக்கொண்டார். இதன் காரணமாக தற்போதைய இறுதி வேட்பாளர்களின் எண்ணிக்கை 27 ஆக உள்ளது. அதேபோல தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் 9ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் 16ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் நாம் தமிழர் கட்சி என மொத்தம் 51 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் தவெக, திமுக, அதிமுக, நாதக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 22 கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. இன்று யாரும் வேட்பு மனுவை வாபஸ் பெறவில்லை என்பதால், தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் 22 பேர் உள்ளனர். தொடர்ந்து, வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். பிரதான கட்சிகளுக்கு அவர்களது அங்கீகாரம் பெற்ற சின்னங்கள் ஒதுக்கப்பட்டு சுயேட்சைகளுக்கு தனி சின்னங்கள் ஒதுக்கப்பட இருக்கிறது.