சென்னை: மதுராந்தகம் இடைத்தேர்தலில், வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட 893 பேர் தபால் வாக்கு அளித்துள்ளனர். தாராபுரம் தொகுதியில் 1,201 பேர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளில் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தவெக, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என இந்த இடைத்தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவுகிறது. இதனால், தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு நேரில் வராமல் தங்களது இல்லங்களிலிருந்தே வாக்களிக்கும் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. 85 வயதுக்கு மேற்பட்ட முதிய வாக்காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் தபால் வாக்குகள் பெறும் பணிகள் கடந்த 22 ஆம் தேதி தொடங்கின. இதற்காக, மதுராந்தகம் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவின்பேரில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டு 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என தபால் வாக்கு அளிக்க தகுதி பெற்ற 931 வாக்காளர்களைச் சந்தித்தனர். மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் 893 தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 931 பேர் தபால் வாக்கு செலுத்த தகுதி பெற்றிருந்த நிலையில், 893 தபால் வாக்குகள் பதிவானதாக தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார். இதேபோல் தாராபுரம் தொகுதியில் மொத்தம் 1,236 பேர் தபால் வாக்கு செலுத்தத் தகுதி பெற்றனர். தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் 1,201 பேர் வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்டு பதிவு செய்துள்ளனர். 1,236 படிவம் 12-டி வழங்கப்பட்டது. இதில் 1,201 பேர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 35 பேர் தபால் ஓட்டு பதிவு செய்யவில்லை. இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறும் நிலையில் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. வாக்கு எண்ணிக்கை தொடங்கும்போது முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும்.