தாராபுரம், மதுராந்தகம்.. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று இன்று கடைசி நாள்!

  • சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவடைகிறது. திமுக, தவெக வேட்பாளர்கள் உட்பட, 35 பேர் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்கின்றனர்.

    Advertisement

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே தமிழ்நாட்டில் அரசியல் களம் பரபரக்கத் தொடங்கிவிட்டது. இந்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி, இடதுசாரிகள் என 5 முனை போட்டி நிலவுகிறது.

    Advertisement

    வேட்பாளர்கள்

    கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவருமே தற்போது தவெக சார்பில் இடைத்தேர்தலில் களமிறங்குகின்றனர். திமுக சார்பில் மதுராந்தகத்தில் பரந்தாமன், தாராபுரத்தில் சுகன்யா ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.

    அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் கே. பானுமதி ஆகியோா் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பாக மதுராந்தகம் தொகுதியில் கோ. ஜானகிராமன், தாராபுரம் தொகுதியில் மு. கார்த்திகா ஆகியோர் போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளார்.

    இந்தத் தேர்தலில் எந்தவொரு முக்கியக் கட்சிகளுடனும் இணையாமல், இடதுசாரி கட்சிகள் தங்களுக்குள் ஒரு தனி அணியாக இணைந்து களம் காண முடிவு செய்தன. மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுகந்தி போட்டியிடுகிறார். அதேபோல, தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் லட்சுமணன் போட்டியிடுகிறார்.

    Advertisement

    வேட்பு மனு தாக்கல்

    தவெக வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மரகதம் குமரவேல், தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்துடன் சென்று தனது மனுவை தாக்கல் செய்தார். திமுக வேட்பாளர் பரந்தாமன், முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் வந்து மனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் மனு தாக்கல் செய்தார்.

    தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யா, 4 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். அவரது கணவர் மணிவாசகமும் மனு தாக்கல் செய்துள்ளார். இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (செப்டம்பர் 16) கடைசி நாள் என்பதால், தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தயபாமா, அதிமுக வேட்பாளர் பானுமதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    Advertisement

    இன்று கடைசி நாள்

    இன்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடையும் நிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (செப்டம்பர் 17) நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற செப்டம்பர் 19 கடைசி நாள். அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6 ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9 ஆம் தேதியும் நடைபெறும். அரசியல் கட்சிகள் தங்களது இறுதிக்கட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.

    English Summary

    The filing of nomination papers for the by-elections in the Maduranthakam and Dharapuram constituencies concludes today. So far, 35 candidates—including those from the DMK and TVK—have filed their nominations.