சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றிய திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், திமுக ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டங்களைச் சுட்டிக்காட்டி, தவெக அரசை நோக்சி நறுக்கென கேள்வி எழுப்பியிருக்கிறார்...!!
சட்டப்பேரவையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று பேசும்போது, "எங்கள் திமுக ஆட்சிக் காலத்தில், ஏழை எளிய மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்கும் வகையில் 5 ஆண்டுகளில் சுமார் 27 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கி சாதனையைப் படைத்தோம்!
அதுமட்டுமன்றி, கொரோனா பேரிடர் காலத்தில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 4,000 நிவாரணத் தொகையும் வழங்கி மக்களின் துயரறிந்து துரிதமாகச் செயல்பட்டது அன்றைய திமுக அரசு. ஆனால், தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பிரச்சாரத்தின்போது என்னென்ன வாக்குறுதிகளைக் கொடுத்தது? தவெக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ. 2,000 வழங்கப்படும் என்றும், வீட்டில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ. 4,000 வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்கள். மேலும், இல்லத்தரசிகளுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் கூறினார்கள். இப்போது ஆட்சி அமைந்த பிறகு அந்த வாக்குறுதிகள் எல்லாம் எங்கே போயின? நாங்கள் 27 லட்சம் பேருக்கு வீட்டு மனைப் பட்டா கொடுத்துச் சாதித்து காட்டியதை போல் அல்லாமல், மக்கள் இப்போது "நீங்கள் ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் கிடைக்கும் என்று சொன்னீர்களே, எங்கே அவை?" என்று நேரடியாக கேட்க தொடங்கிவிட்டனர். தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கி மக்களை நம்பவைத்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுள்ளீர்கள். மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000, இளைஞர்களுக்கான உதவித்தொகை ரூ. 4,000 மற்றும் இலவச சிலிண்டர்கள் என மக்கள் எதிர்பார்த்த எந்தவொரு திட்டமும் இதுவரை மக்களை சென்றடையவில்லை" என்று சாடினார். திமுக ஆட்சியில் 27 லட்சம் பேருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கியதை சுட்டிக்காட்டி, தவெக அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை நோக்கிய அவரது காரசாரமான பேச்சு சட்டமன்றத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. காரணம், தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள சூழலில், ஆளுங்கட்சியினர் 100 நாள் சாதனை மனநிலையில் கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கிறார்கள்.. இந்த 3 மாத காலகட்டத்தில் முதல் நாளிலேயே 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கான "சிங்கப்பெண்" சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருள் தடுப்பு படை உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து 717 டாஸ்மாக் கடைகள் மூடல், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, குறு விவசாயிகளின் ரூ. 50 ஆயிரம் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதுமட்டுமல்லாமல் பட்ஜெட்டில் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டதுடன், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற 125 வாக்குறுதிகள் பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சரும் தெரிவித்திருந்தார். தொழில்துறையிலும் 100 நாட்களில் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ. 1.02 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 1.21 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு தரப்பில் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் இன்னொருபக்கம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, அடிக்கடி ஏற்படும் மின்தடை பிரச்சனை, குப்பை அகற்றுவதில் தொய்வு போன்ற பல்வேறு விவகாரங்களில் அதிமுக, திமுக, பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் தவெக அரசுக்கு எதிராகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. அரசு தனது 100 நாள் சாதனையை ஹேப்பியாக கொண்டாடி வரும் அதேசமயம், திமுக ஆட்சியில் 27 லட்சம் பேருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கியதை சுட்டிக்காட்டி, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து சட்டமன்றத்தில் மூத்த தலைவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று எழுப்பியுள்ள கேள்விக் கணைகள் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன....!!!கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்
மகளிர் உரிமைத் தொகை எப்போது
27 லட்சம் பேருக்கு வீட்டு மனைப் பட்டா
100 நாள் ஆட்சி மீது விமர்சனம்