இன்றே ஸ்டாலின் எடுக்கும் முடிவு.. உதயநிதிக்கு புதிய பதவி! சேகர்பாபு மீது நடவடிக்கை! ரகசிய ரிப்போர்ட்

  • சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இன்று மதியம் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

    Advertisement

    சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக உட்கட்சி விவகாரங்களில் தீவிர மாற்றங்களை முன்னெடுக்க உள்ள சூழலில், வருகிற 22-ஆம் தேதி கூடவுள்ள திமுக உயர்நிலைச் செயல் திட்டக் குழு மற்றும் திமுக செயற்குழு கூட்டத்தில் மிக முக்கியமான முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. அதற்கான முடிவுகள் இன்றே எடுக்கப்பட உள்ளன.

    Advertisement

    உதயநிதி, கனிமொழிக்கு புதிய பொறுப்புகள்

    கட்சியின் கட்டமைப்பை இளைய தலைமுறையினரை நோக்கி நகர்த்தும் விதமாக, உதயநிதி ஸ்டாலினை திமுகவின் செயல் தலைவராக நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோன்று, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு இணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், கட்சியில் புதிய பொறுப்புகள் உருவாக்கப்பட்டு அவற்றுக்கு செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட உள்ளது. குறிப்பாக, 70 வயதைக் கடந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாது என்ற புதிய விதியை அமல்படுத்தவும், பதவி இழக்கும் மூத்த நிர்வாகிகளுக்கு கட்சியில் மாற்று பொறுப்புகள் வழங்கவும் தலைமை திட்டமிட்டுள்ளது.

    Advertisement

    36 பேர் கள ஆய்வுக் குழு சமர்ப்பித்த ரகசிய அறிக்கை

    சென்னையில் திமுக சந்தித்த வரலாறு காணாத பின்னடைவுக்கான காரணங்களை ஆராய, மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட 36 பேர் கொண்ட ஆய்வுக் குழு, கடந்த ஒரு மாதமாக தீவிர கள ஆய்வு மேற்கொண்டு இறுதி அறிக்கையைத் தலைமையிடம் சமர்ப்பித்துள்ளது. அறிவாலய வட்டார தகவல்களின்படி, இந்த ரகசிய அறிக்கையில் சென்னை மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.கே.சேகர் பாபு மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் திமுகவின் வாக்கு வங்கி சரிந்ததற்கு நிர்வாகக் குளறுபடிகள், கோஷ்டி மோதல்கள் மற்றும் களப்பணியாளர்களின் அதிருப்தியே பிரதான காரணம் என ஆய்வுக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பின்னடைவைச் சந்தித்ததற்கும், வடசென்னையில் தவெகவின் எழுச்சிக்கும் சேகர் பாபுவின் செயல்பாடுகளே முக்கியக் காரணம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அடிமட்டத் தொண்டர்களின் அதிருப்தி

    பல ஆண்டுகளாகக் கட்சிக்காகவும் துறைகளிலும் உழைத்த அடிமட்டத் தொண்டர்களை ஓரங்கட்டிவிட்டு, தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களுக்கு மட்டுமே கோயில் அறங்காவலர் குழு உள்ளிட்ட முக்கியப் பதவிகளை சேகர் பாபு வழங்கினார் என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுந்துள்ளது. இது களப்பணியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி தேர்தல் பணிகளில் தொய்வை உருவாக்கியது. மேலும், கொளத்தூரில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வியூகங்களை சரியாகக் கணிக்கத் தவறியதும், அதீத நம்பிக்கையும் தோல்விக்கு வித்திட்டதாக முன்னாள் எம்.பி.க்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் தலைமைக்குப் புகார்களை ஆதாரங்களுடன் வழங்கியுள்ளனர்.

    சேகர் பாபு மீது நடவடிக்கை எடுப்பதில் ஸ்டாலினின் தயக்கம் ஏன்?

    இவ்வளவு கடுமையான புகார்கள் இருந்தபோதிலும், சேகர் பாபு மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் தயங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் தவெக மற்றும் அதிமுகவின் பலம் அதிகரித்து வரும் சூழலில், களப்பணி ஆற்றுவதில் அனுபவம் வாய்ந்த சேகர் பாபுவை நீக்குவது கட்சியின் கட்டமைப்புக்குப் பாதகமாக அமையலாம் எனத் தலைமை கருதுகிறது.

    Advertisement

    மேலும், தேர்தல் முடிவுகளுக்குப் பின் கொளத்தூருக்கு ஸ்டாலின் சென்றபோது, சேகர் பாபு உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டது தலைமையின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிழைகள் இருந்தாலும், சென்னையை மீட்டெடுக்க அவரது களப்பணி தேவை என்பதால், கடுமையான தண்டனைக்கு மாறாக எச்சரிக்கை விடுத்து நிர்வாக மாற்றங்களை மட்டுமே மேற்கொள்ள ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

    எனினும், தோல்விக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தொண்டர்களின் மன உறுதி பாதிக்கப்படும் என்ற குரல்களும் அறிவாலயத்தில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. உட்கட்சி ஒற்றுமையை குலைக்காமல், தொண்டர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க மு.க.ஸ்டாலின் எடுக்கவுள்ள இந்த நிர்வாக மாற்றங்கள் அரசியல் களத்தில் திமுகவை எவ்வாறு மறுசீரமைக்கும் என்பதை வரும் மாதங்கள் தீர்மானிக்கும்.

    English Summary

    Major change in DMK: Udhayanidhi as Working President? Stalin's Crucial Decision