விஜய் பெயரை வைத்தே விபூதி.. வட மாநிலத்தில் நடந்த மோசடி.. சைபர் கிரைம் போலீஸ் சொல்வது என்ன?

  • சென்னை: தமிழக முதல்வர் விஜய் பெயரில் அறக்கட்டளை உள்ளதாக கூறி மத்திய பிரதேசத்தில் மக்களிடம் சைபர் கிரைம் கும்பல் பணம் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஏழைகளுக்கு உதவுவதாக கூறி ரூ.10 லட்சம் வசூல் செய்துள்ளதாகவும் இது தொடர்பான புகார்கள் குவிந்து வருவதாகவும் இந்தூர் போலீசார் தெரிவித்துள்ளனர். சைபர் கிரைம் குற்றவாளிகளை பிடிக்க தமிழக போலீசாரின் உதவியை நாடியிருப்பதாகவும் இந்தூர் போலீசார் கூறியுள்ளனர்.

    Advertisement

    விஜய்யின் ரீல்ஸ்கள் வடமாநிலங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில் அதனை பயன்படுத்தி இந்த மோசடி அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது விஜய் பெயரில் அறக்கட்டளை இயங்கி வருவதாகவும், இதில் இருந்து ஏழைகளுக்கு உதவிகள் செய்யப்படுவதாகவும் பொதுமக்களிடம் கூறி குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் ரூ.50 ஆயிரம் வரை வசூல் செய்து இந்த மோசடியினை சைபர் கிரைம் கும்பல்கள் அரங்கேற்றியுள்ளனர்.

    Advertisement

    விஜய் பெயரில் சைபர் கிரைம் மோசடி

    நாடு முழுக்க பல்வேறு நூதன முறைகளில் சைபர் கிரைம் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இது தொடர்பாக போலீசார் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும் மோசடியாளர்களும் புதுப்புது டெக்னிக்குகளை பயன்படுத்தி நூதன முறையில் மோசடிகளை அரங்கேற்றி வருகிறார்கள். அப்படித்தான் தமிழக முதல்வர் விஜய் பெயரில் தற்போது மத்திய பிரதேசத்தில் பெரிய அளவில் சைபர் கிரைம் மோசடி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக முதல்வர் விஜய்யின் அறக்கட்டளை என்ற பெயரில் சைபர் கிரைம் கும்பல்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக மத்திய பிரதேச மாநில தலைநகர் இந்தூரில் புகார்கள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில சைபர் கிரைம் குற்றத்தடுப்பு காவல் அதிகாரி ராஜேஷ் தனுசியா கூறுகையில், தமிழக முதல்வர் விஜய் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டு இருப்பதாகவும், அவரது பெயரில் கல்விக் கடன், தொழிற்கடன், சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள் வழங்கப்படுவதாகவும் கூறி பொதுமக்களை அனுகி மோசடி நடந்து வருகிறது.

    Advertisement

    6 வழக்குகள் பதிவு

    பொதுமக்களிடம் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்குவதாகவும் இதற்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் கட்ட வேண்டும் என்று சொல்லி குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் 50 ஆயிரம் வரை பணத்தை வசூல் செய்து மோசடி செய்து வருவதாக புகார்கள் குவிந்து வருகின்றன. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது" என்று கூறியுள்ளார்.

    சைபர் கிரைம் தடுப்பு போலீஸ் கூறுவது என்ன?

    சமீப காலமாக இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வருகின்ற்ன. ஏஐ பயன்படுத்தி போலி வீடியோ உருவாக்குவதல், பிரபலமானவர்கள், தெரிந்தவர்களின் குரலை குளோனிங் செய்து அவர்களை போலவே பேசி மோசடி செய்தல், இணையதள மோசடி என புதுப்புது வழிகளில் மோசடி நடப்பதால் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    Advertisement

    அதிக பணம் கிடைக்கும் என்று ஆசை காட்டுபவர்களின் வலையிலும் வீழ்ந்துவிடக்கூடாது என்பதே போலீஸ் கூறும் அறிவுரையாக உள்ளது. மேற்கூறிய சம்பவம் குறித்து இந்தூர் போலீஸ் கூறியதாவது: - 'குற்றப்பிரிவு போலீசார் தமிழக காவல்துறையுடன் தொடர்பு கொண்டு, முதல்வரின் பெயரை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம் மற்றும் போலி அறக்கட்டளை தொடர்பான விவரங்களைப் பகிர்ந்து வருகின்றனர்" என்றனர்.

    பொதுமக்களுக்கு எச்சரிக்கை

    காவல்துறை தரவுகளின்படி, இந்தூரில் இந்த ஆண்டு மட்டும் ஆயிரக்கணக்கான சைபர் குற்றப் புகார்கள் பதிவாகியுள்ளன. உரிமை கோரப்படாத பணம், மானியம் அல்லது நிதியுதவி வழங்குவதாகக் கூறி வரும் சலுகைகளை நம்பி பணத்தைப் பரிமாற்றம் செய்ய வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை தொடர்ந்து எச்சரிக்கையும் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் முதல்வர் தொடர்பான வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் அதிகம் டிரெண்ட் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் விஜய் தொடர்பான நடவடிக்கைகள் ரீல்ஸ்களாக வெளியாகி டிரெண்ட் ஆகி வருகின்றன. பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தவறான தகவல்களை கூட இன்ஸ்டாகிராமில் பரப்பி வருகின்றனர். இப்படி ரீல்ஸ்கள் அதிகம் பரவி வருவதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடி கும்பல்கள் இந்த நூதன மோசடியை அரங்கேற்றியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    English Summary

    It has come to light that a cybercrime gang in Madhya Pradesh is collecting money from the public by claiming the existence of a charitable trust named after Tamil Nadu Chief Minister Vijay. The Indore police have stated that the gang has collected ₹10 lakh under the pretext of helping the poor and that complaints regarding this matter are pouring in.