வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்.. முதல்வர் விஜய் உத்தரவு!

  • சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு "மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை" என பெயர் சூட்டப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தை போற்றும் வகையில், இந்த சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு முகுந்தின் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- இந்திய ராணுவத்தில் திறம்படப் பணியாற்றி, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது வீரமரணம் அடைந்தவரும், மரணத்திற்குப் பிறகு, இந்திய அரசின் அமைதிக்கால உயரிய விருதான அசோக் சக்ரா விருது பெற்றவருமான மேஜர் முகுந்த் வரதராஜன் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு "மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை" எனப் பெயர் சூட்டிட வேண்டும் என முதல்வர் விஜய்யை, இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிகளுக்கான தளபதி லெப்டினண்ட் ஜெனரல் வி.ஶ்ரீஹரி நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.

    Advertisement

    இந்தக் கோரிக்கையினைக் கனிவுடன் பரிசீலித்த முதல்வர், இக்கோரிக்கையின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதனடிப்படையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு, இந்தியத் திருநாட்டிற்காகப் போராடி உயிர்நீத்த வீரரின் மாபெரும் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தமிழில் "மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை" எனவும், ஆங்கிலத்தில் "MAJOR MUKUND VARADARAJAN SALAI" எனவும் பெயர் சூட்டுவதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Major Mukund Varadarajan: Tamil Nadu Chief Minister Vijay announces that a road in Velachery will be named after Major Mukund Varadarajan to honour his sacrifice. The decorated Army officer lost his life during an anti-terror operation, and the decision has been welcomed by his family.