மாமல்லபுரம் பள்ளியில் அயர்லாந்து IT ஊழியர் மைக்கேல் நெகிழ்ச்சி.. சாதித்த பூஞ்சேரி சிறுவன் சர்வேஷ்

  • சென்னை: மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த இடத்தில்தான், பூஞ்சேரி சிறுவன் சர்வேஷை முதல்முதலாக சந்தித்தார் மைக்கேல்.. இந்த அயர்லாந்து மென்பொறியாளர் மைக்கேல் மாமல்லபுரத்தில் அன்று செய்த செயல், இன்று ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையுமே பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. என்ன நடந்தது? யார் இந்த அயர்லாந்து மைக்கேல்?

    Advertisement

    அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் மைக்கேல்.. இவர் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர்.. அதற்காக வெறும் ஐடி கம்பெனி சம்பளத்தை மட்டும் வைத்துக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்பவர் இல்லை..

    Advertisement

    அயர்லாந்து மைக்கேல்

    இவர் உலகம் முழுதும் சுற்றுலா செல்லும்போது, ஆங்காங்கே இருக்கும் ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்கு தன்னுடைய சொந்தச் செலவில் உதவி செய்து வருபவர்.. இதை தன்னுடைய வாழ்நாளில் ஒரு மனிதநேய சேவையாகவே செய்து வருகிறார்.

    அப்படித்தான் கடந்த வருடம், நம்முடைய மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணியாக வந்திருந்தார்.. அப்போதுதான், மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி என்ற பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவன் சர்வேஷ். இவருடைய கண்ணில் பட்டுள்ளான்.

    மாமல்லபுரத்தில் சுற்றுலா

    சர்வேஷ் ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்டவர்.. போதிய பொருளாதாரம் கிடையாது.. சொல்ல முடியாத அளவுக்கு வறுமை.. இதனால் சர்வேஷால், பள்ளிக்கூடம் பக்கமே போக முடியவில்லை...

    Advertisement

    மாமல்லபுரம் பீச் ரோட்டில் மைக்கேல் வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது, எதேச்சையாக இந்த சிறுவனை சந்தித்துள்ளார்.. அவனது குடும்ப சூழ்நிலையைக் கேட்டு அதிர்ச்சியும் அடைந்தார்.. வெறும் அனுதாப வார்த்தைகளை மட்டும் சொல்லிவிட்டு கடந்து செல்ல அவருக்கு மனம் வரவில்லை. உடனே, அந்த சிறுவனின் வாழ்க்கையையே மாற்றியமைக்க நினைத்தார்..

    சிறுவன் சர்வேஷை

    சிறுவன் சர்வேஷை கல்விக்காக உடனடியாக தத்தெடுத்தார் மைக்கேல். ஆரம்பக் கல்வி முதல் கல்லூரி வரையிலான அவனது அனைத்துக் கல்விச் செலவுகளையும் தானே முழுமையாக ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார்.

    சொன்னபடியே, மாமல்லபுரம் அடுத்த வட கடம்பாடியில் இயங்கி வரும் முன்னணித் தனியார் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளியில் சிறுவன் சர்வேஷைத் தன் சொந்தச் செலவில் கொண்டு போய்சேர்த்தார்.. அதற்கான பணத்தையும் கட்டினார்.. வெறும் பணத்தை மட்டும் கட்டிவிட்டு ஒதுங்கிவிடாமல், பள்ளியில் சேர்த்ததில் இருந்தே சிறுவனின் படிப்பிற்குத் தேவையான அத்தனை உபகரணங்களையும் உடனுக்குடன் வாங்கி அனுப்பினார்.

    Advertisement

    அதேபோல, போன் செய்து சிறுவனுக்கு அடிக்கடி தன்னம்பிக்கை ஊட்டி வந்தார்... அதுமட்டுமல்ல, சர்வேஷ் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வேண்டும் என்பதற்காக அயர்லாந்தில் இருந்தபடியே அவனுக்கு சிறப்பு ஆன்லைன் பயிற்சிகளையும் வழங்கி, தினந்தோறும் ஊக்கப்படுத்தி வந்தார்.

    மழலையர் பட்டமளிப்பு விழா

    இந்த நிலையில் தான், அந்தச் சிபிஎஸ்இ பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. பள்ளியில் சிறுவன் சர்வேஷின் நன்னடத்தை, அழகான கையெழுத்து, ஒருநாள்கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த விதம் மற்றும் அவனது துல்லியமான ஆங்கில உச்சரிப்பு போன்ற நற்குணங்களைப் பாராட்டி, அவனுக்கு சிறப்பு மழலையர் பட்டம் வழங்க போவதாக அறிவிக்கப்பட்டது.

    Advertisement

    இப்படிப்பட்ட மகிழ்ச்சி தருணத்துக்காகத்தான் மைக்கேல் காத்திருந்தார்.. விஷயத்தை கேள்விப்பட்டதுமே பல ஆயிரம் மைல்கள் கடல் கடந்து விமானம் ஏறி மாமல்லபுரத்திற்கு ஓடோடி வந்தார் மைக்கேல்.

    வாரி அணைத்து முத்த மழை

    பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மைக்கேலுக்குப் பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பான பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேடையில் தன்னுடைய கையாலேயே பட்டம் பெற்ற சிறுவன் சர்வேஷை, கட்டிப்பிடித்து, முத்தமழை பொழிந்தார்.

    கண்ணெதிரே ஒரு ஏழைச் சிறுவனின் வாழ்க்கை சீரமைக்கப்பட்டு, கல்வி என்னும் அழியா செல்வத்தை பெற்று நிமிர்ந்து நிற்பதைக் கண்டு, அங்கு திரண்டிருந்த மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மெய்சிலிர்த்து, வியப்பில் ஆழ்ந்து போய்விட்டனர்.. இந்த நெகிழ்ச்சி வீடியோ இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது...!!

    English Summary

    Mamallapuram School Event.. Ireland IT Worker Michael’s Heart-Touching Moment With Sarvesh