“Deep Silent Mode”ல் தலைவர்கள்?.. உதயநிதி - எடப்பாடிக்கு மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி!

  • சென்னை: தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு கூட்டணி கணக்குகள் மற்றும் ஆதரவு அரசியல் தீவிரமடைந்துள்ள நிலையில், NEET தாள் கசிவு மற்றும் பெட்ரோல் விலை உயர்வு போன்ற மக்கள் பிரச்சனைகளில் திமுக மற்றும் அதிமுக தலைவர்கள் மௌனம் காக்கிறார்கள் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்ந்து பரபரப்பை கிளப்பி வருகின்றன. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை பெற தவெக பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

    Advertisement

    இந்த சூழலில், திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் தலா 2 எம்எல்ஏக்களும் ஆதரவு அளித்தனர். இதன் மூலம் தவெகவின் ஆதரவு பலம் 120 ஆக உயர்ந்தது. இதையடுத்து தவெக ஆட்சியமைத்து விஜய் முதல்வராக பதவியேற்றார்.

    காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில் ஆட்சியை விமர்சித்து திமுக, அதிமுக தலைவர்கள் தொடர்ந்து கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திமுக - அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    இந்நிலையில், மக்கள் பிரச்சனைக்கு மெனமாக இருப்பது ஏன்? என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது, NEET தாள் கசிவில் லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு சிதறுகிறது... 4வது முறையாக பெட்ரோல் விலை உயர்ந்து சாமானிய மக்கள் தினமும் சுமையடிக்கிறார்கள்...

    ஆனா நம்ம "எப்போதும் பேசுவோம்" தலைவர்கள் மட்டும் Deep Silence Mode-ல! 🤐 உதயநிதி ஸ்டாலின்... பழனிசாமி... ஒருத்தராவது ஒரு வார்த்தை சொன்னாங்களா?.

    Advertisement

    மக்கள் பிரச்சனை வந்தா மவுனம்... அரசியல் வந்தா மைக்கை பிடிக்க போட்டி! தமிழக மக்கள் கேட்கிறார்கள்: இந்த அமைதிக்கு காரணம் என்ன? அல்லது... "மேலிருந்து" பேசக்கூடாது என்று group call Order வந்திருச்சா? என்று தெரிவிக்கபட்டுள்ளது.

    English Summary

    Manickam tagore: After the 2026 Tamil Nadu Assembly election, political tensions continue as TVK forms the government with support from alliance parties. Congress MP Manickam Tagore questioned the silence of Udhayanidhi Stalin and Edappadi K. Palaniswami over issues like the NEET paper leak and petrol price hike. His “Deep Silent Mode” remark against both leaders is now creating a fresh political buzz across Tamil Nadu.