பெருந்தகை மேல் பெருங்கோபத்தில் ராகுல்.. மாநில தலைவராகும் மாணிக்கம் தாகூர்? குறுக்கே வந்த அண்ணாச்சி!


  • சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவரை டெல்லி மாற்றப் போவதாக எழுந்த பேச்சுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், புதிய தலைவராக யார் வரப்போகிறார் என்ற கேள்வி காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய தலைவர் செல்வப்பெருந்தகை பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது இடத்தை நிரப்ப பல்வேறு பெயர்கள் டெல்லி மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த போட்டியில் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவு அதிகரித்துள்ள நிலையில், மகனை தலைவராக்க ப.சிதம்பரமும் களமிறங்கியுள்ளாராம்.

    Advertisement

    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சமீபத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினார். அப்போது மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து விலக விருப்பம் தெரிவித்ததாகவும், அதற்கு பொறுமையாக இருக்குமாறு கார்கே அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    இதற்கிடையே, தமிழக காங்கிரஸில் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் பணியில் டெல்லி மேலிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தமிழக காங்கிரஸ்

    இந்த சூழலில், தமிழக அரசில் அமைச்சர்களாக உள்ள விஸ்வநாதன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் டெல்லி சென்று கார்கேவை நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூரை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணிக்கம் தாகூர் கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசியல் விவகாரங்களில் தீவிரமாக குரல் கொடுத்து வருகிறார்.

    Advertisement

    மாணிக்கம் தாகூர்

    குறிப்பாக மாநில அரசியல் சூழல், கூட்டணி மற்றும் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதால், அவருக்கு கட்சிக்குள் ஒரு தனி ஆதரவு வட்டாரம் இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், மாநிலத் தலைவர் மாற்றம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரமும் தீவிரமாக களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவரது நிலைப்பாடு வேறுபட்டதாக இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ப சிதம்பரம்

    செல்வப்பெருந்தகை தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதே சிதம்பரத்தின் விருப்பம் என கூறப்படுகிறது. ஒரு வேளை தலைமை மாற்றம் தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் அல்லது கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் ஆகியோரில் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்று அவர் மேலிடத்தில் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இதனால் தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம் மற்றும் விஷ்ணுபிரசாத் ஆகிய மூன்று பெயர்களும் முக்கியமாக பேசப்பட்டு வருகின்றன.

    Advertisement

    செல்வப்பெருந்தகை

    மறுபுறம், செல்வப்பெருந்தகை பதவியில் இருந்து மாற்றப்பட்டால் அவர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையக்கூடும் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்பாடும் இல்லாவிட்டாலும், கட்சிக்குள் நடைபெற்று வரும் ஆலோசனைகளில் இந்த விவகாரமும் பேசுபொருளாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

    காங்கிரஸ் தலைவர் யார்?

    தமிழகத்தில் 2029 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் கட்சியின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, மாநிலத் தலைவர் தேர்வை காங்கிரஸ் மேலிடம் மிகவும் கவனமாக அணுகி வருகிறது. புதிய தலைவராக மட்டும் அல்லாமல், கட்சியை ஒருங்கிணைத்து கூட்டணியிலும் திறம்பட செயல்படக்கூடியவர் யார் என்பதையும் மேலிடம் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், தமிழக காங்கிரஸின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வரலாம் என்கின்றனர்.

    English Summary

    TN Congress leadership race heats up as Manickam Tagore gains support amid reports of Selvaperunthagai's exit.