“நயினார் எப்படி மோடியின் மேடையில் அமரவைக்கப்பட்டார்? என்ன புரோட்டோகால்?” - மாணிக்கம் தாகூர் கேள்வி

  • சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னையில் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எந்த புரோட்டோகால் அடிப்படையில் மேடையில் அமரவைக்கப்பட்டார் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    பிரதமர் நரேந்திர மோடி, பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில், சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்கள் அடிக்கல் நாட்டுதல், முடிந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தல் உள்ளிட்டவற்றை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்காக இன்று சென்னை வருகை தந்தார்.

    Advertisement

    இன்று காலை 11 மணி அளவில் சென்னை வந்த பிரதமர் மோடி, ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது பாஜகவினர் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    சுமார் 11.30 மணி அளவில் சென்னை போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நண்பகல் 12.15 மணி அளவில் சென்னை ஐஐடி அருகே உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

    அதன்பிறகு, சென்னை ஐஐடியில் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, பிற்பகல் 1.30 மணி அளவில் கிண்டி வித்யாலயா மைதானத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில், பங்கேற்று சுமார் ரூ. 13 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    Advertisement

    இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அமைச்சர் என். ஆனந்த், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், எம்.பி எனும் முறையில் தனக்கு அழைப்பு விடுக்காதது ஏன் எனவும், எம்.எல்.ஏ-வாக கூட இல்லாத நயினார் எந்த அடிப்படையில் மேடையில் இருந்தார் எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    அந்த வீடியோவில் பேசியுள்ள மாணிக்கம் தாகூர், "இன்றைய பிரதமர் நிகழ்ச்சியில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் - கொல்லம் நெடுஞ்சாலை திறப்பு விழாவும் நடைபெற்றது. இதில், அப்பகுதி எம்.பி எனும் முறையில் எனக்கு அழைப்பு இல்லை. அதேபோல், இவ்வளவு பெரிய நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்காதது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

    அதேபோல சாத்தூர் தொகுதியில் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்து, எம்.எல்.ஏ, எம்.பி என எந்தப் பதவியிலும் இல்லாத அண்ணன் நயினார் நாகேந்திரன் பிரதமர் மோடியுடன் மேடையில் எந்தப் புரோட்டோகால் அடிப்படையில் அமரவைக்கப்பட்டார் என்பது மிகவும் வியப்பாக இருந்தது.

    Advertisement

    இது மத்திய அரசின் நிகழ்ச்சி. இதற்கென சில புரோட்டோகால் இருக்கு. யார் யார் மேடையில் அமரலாம்? லோக்கல் எம்.எல்.ஏ. இருக்கலாம், அமைச்சர்கள் இருக்கலாம், லோக்கல் எம்.பி. இருக்கலாம். இதுதான் புரோட்டோகால். ஆனால் நயினார் நாகேந்திரன் எப்படி இன்றைக்கு மோடி அருகே அமர வைக்கப்பட்டார்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    English Summary

    "How Nainar Nagendran can sit in the union government function with Prime Minister Modi? For BJP State President protocol can be changed?" asks Congress Leader Manickam Tagore.