சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசினார். அப்போது திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த ஏ.செல்வராஜ் என்பவரை புகழ்ந்து பேசினார். இந்த ஏ செல்வராஜ் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளிலும் மனதின் குரல் (மன் கி பாத்) என்ற வானொலி நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் பேசி வருகிறார். அந்த வகையில் பிரதமர் மோடியின் 138 வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் கேட்க நாடு முழுவதும் பாஜகவினர் ஏற்பாடுகள் செய்திருந்தனர். இன்றைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி திருச்சி மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரை பாராட்டினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது: ''கடந்த காலத்துடனான நமது பந்தம் இன்றும் கூட மிகவும் உயிர்ப்புடன் இருக்கிறது. இதன் பின்னணியில் சிலருடைய அர்ப்பணிப்பு உணர்வும்,உழைப்பும் இருக்கிறது. தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறையில் இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான முயற்சி நடைபெற்று வருகிறது. ஒரு கல்லூரியில் தமிழ் கல்வி துறையோடு தொடர்புடைய ஏ.செல்வராஜ் முக்கியமான பணியை முன்னெடுத்து செல்கிறார். அவருக்கு அவரது மாணவனிடம் இருந்து தொண்மையான உருவச்சிலைகள் பற்றி தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து அவர் ஆய்வு செய்தார். அப்போது பல உருவச்சிலைகளும், தொண்மையான கோவில்களும் கிடைத்தன. கடந்த காலத்தோடு தொடர்பு கொள்வதற்கு இது ஒரு சுவாரசியமான முயற்சியாகும். இதை போலவே நாம் நமது மரபுகளை பற்றி மேலும் சிறப்பான முறையிலேயே தெரிந்து கொள்ளலாம். தேசத்தின் பிற பகுதிகளிலும் இத்தகைய முயற்சிகள் செய்யப்படலாம். நம் வரலாற்றை மேலும் நுணுக்கமாக பார்க்கும் வாய்ப்பை இதுபோன்ற செயல்கள் அளிக்கின்றன'' என்று கூறினார். பிரதமர் நரேந்திர மோடி பாராட்டிய ஏ செல்வராஜ், மணப்பாறையை சேர்ந்த ஒரு வரலாற்று ஆய்வாளர் ஆவார். இவர் பண்டைய கால சிற்பங்கள், கோவில்களை கண்டறிந்து ஆவணப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனால் தான் அவரை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். இதுதவிர பிரதமர் மோடி தனது உரையில் தற்போது நடைபெற்றுவரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தையும், அதில் நாட்டு மக்களாகிய நமது பங்கு குறித்தும், டிஜிட்டல் முறையில் சுயமாக நாமே பதிவு செய்யும் வகையில் se.census.gov.in என்ற இணையதளம் உள்ளது பற்றியும் விவரித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.