மாரிதாஸ் கைது! திமுக அரசின் பாணியையே தவெகவும் பின்பற்றுகிறதே! வானதி கண்டனம்

  • சென்னை: விமர்சன குரல்களை ஒடுக்க முயல்வது எந்த அரசுக்கும் ஏற்றதல்ல என்று மாரிதாஸ் கைது குறித்து பாஜக மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ரீல்ஸ் மாடல் ஆட்சி நடத்தி வரும் விஜய் அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்களையும் குறைகளையும் சுட்டிக்காட்டிய யூடியூபர் மாரிதாஸ் மீது காவல்துறையினர் மேற்கொண்ட கைது நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

    Advertisement

    ஜனநாயகத்தில் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும். ஆனால் அந்த உரிமையை ஒடுக்குவதற்காக கைது நடவடிக்கைகளை ஆயுதமாக பயன்படுத்துவது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல்.

    கடந்த ஆட்சிக் காலத்திலும் அரசின் தவறுகளை வெளிச்சமிட்டுக் காட்டியவர்களை கைது செய்து, சமூக ஊடக விமர்சகர்களை அச்சுறுத்திய திமுக அரசின் பாணியையே தற்போது தவெக அரசும் பின்பற்றுகிறது.

    கருத்து சுதந்திரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் மதிக்காமல் விமர்சன குரல்களை ஒடுக்க முயல்வது எந்த அரசுக்கும் ஏற்றதல்ல. விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியது பதில்களால்.. கைது நடவடிக்கைகளால் அல்ல. இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    அண்மைக்காலமாக முதல்வர் விஜய், தவெக அமைச்சர்கள், தவெக எம்எல்ஏக்கள் ஆகியோர் மீது ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோ வெளியிட்டு வந்தவர் மாரிதாஸ். இவர் வலதுசாரி ஆதரவாளர். இவர் ஏஐ மூலம் வீடியோக்களை வெளியிட்டு அவதூறு பரப்புவதாக தவெகவினர் குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் மதுரையில் உள்ள மாரிதாஸின் வீட்டிற்கு 10-க்கும் மேற்பட்ட சென்னை சைபர் கிரைம் போலீஸார் சென்று அவரை கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தனது வீட்டிற்கு 10-க்கும் மேற்பட்ட போலீஸார் வந்துள்ளதாக மாரிதாஸே தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். மாரிதாஸ் கைதுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் வானதி சீனிவாசனும் கண்டித்துள்ளார்.

    English Summary

    Vanathi Srinivasan has criticized the arrest of Maridhas, stating that attempts to suppress critical voices are inappropriate for any government. The BJP Mahila Morcha leader's remarks have added a political dimension to the controversy surrounding Maridhas' arrest in Tamil Nadu.