அமைச்சர் மரிய வில்சன் வழக்கு: “சமரச பேச்சுவார்த்தையில் விருப்பமில்லை” என சகோதரர் மனைவி வாதம்!

  • சென்னை: தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கை ரத்து செய்யக்கோரி மரிய வில்சன் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. புகார்தாரரான அவரது சகோதரர் மனைவியை இன்று ஆஜராகும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்‌.

    Advertisement

    உருட்டுக் கட்டைகளுடன் வீடு புகுந்த மரிய வில்சன் தரப்பினர், அவரது சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக இதில் காயமடைந்த அவரது சகோதரரின் மனைவி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மரிய வில்சன் மீது அத்துமீறி நுழைதல், தாக்குதல், சேதம் விளைவித்தல், ஆபத்தான ஆயுதத்தால் காயம் ஏற்படுத்துதல், பெண்ணை மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல், கூட்டுசதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் மரிய வில்சன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சமரச தீர்வு மையத்தை அணுகி தீர்வு காண சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 9 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

    Advertisement

    அதன்படி, நான்கு முறை சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அவர்களுக்கு இடையே சமரசம் எட்டப்படவில்லை. இந்நிலையில் அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மரிய வில்சன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காஜா மொய்தீன் கிஸ்தி, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சமரச தீர்வு மையத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரே ஒரு அம்சம் தவிர்த்து மற்ற விவகாரங்களில் தீர்வு எட்டப்பட்டுவிட்டதாகவும், புகார்தாரர் ஒப்புதலின் பெயரில்தான் இந்த விவகாரம் சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

    Advertisement

    ஆனால், புகார்தாரர் கெரோலின் தரப்பில், இரு தரப்பினரிடையே நடந்த சமரச பேச்சுவார்த்தையில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. "நாங்கள் சமாதான பேச்சுவார்த்தையை விரும்பவில்லை. 4 முறை நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையின் போதே எங்களுக்கு இதில் விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளோம். சமரச மையத்தில் நடைபெற்ற விசாரணை அறிக்கை தயாராக உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

    புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அமைச்சர் மரிய வில்சன் அவரது சகோதரர் குடும்பத்தினரை தாக்கிய வீடியோ ஆதாரங்கள் உள்ளது என்றும், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளும் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். மேலும், குற்றத்திற்கான அனைத்து முகாந்திரமும் உள்ளது எனக் கூறினார்.

    Advertisement

    இதையடுத்து நீதிபதி, "நீதிமன்றத்தில் முதலில் சமாதனம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்து விட்டு, பின் சமாதானத்தில் விருப்பம் இல்லை என தெரிவிப்பதை ஏற்க முடியாது. அதனால், புகார் அளித்த கெரோலின் வீடியோ காலில் ஆஜராகி அவரது நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும்.

    சமாதானத்தில் விருப்பம் இல்லை என அவர் தெரிவித்தால், நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை செய்யப்படும். சமரசத்தை ஏற்பதாக தெரிவித்தால் மீண்டும் சமரச தீர்வு மையத்திற்கு வழக்கு அனுப்பப்படும் என நீதிபதி கூறினார். தொடர்ந்து, புகார்தாரரான கெரோலின் காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தார்.

    Advertisement

    அதன்படி, இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மரிய வில்சனின் சகோதரரின் மனைவி கெரோலின் நேரில் ஆஜராகி, "நீதிமன்றம் சமரச தீர்வு மையத்துக்கு செல்ல அறிவுறுத்தியதால் சமரசத்துக்கு சென்றேன். சமரசம் செய்வதற்கு விருப்பமா? இல்லையா? என நீதிமன்றம் என்னிடம் கேட்கவில்லை.

    எனது விருப்பத்தை கேட்காமல் சமரச தீர்வு மையத்துக்கு வழக்கை மாற்றியது உயர்நீதிமன்றம். நீதிமன்றம் உத்தரவிட்டதால் வேறு வழியின்றி சமரசத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சுய விருப்பத்துடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை" எனத் தெரிவித்தார்.

    அதைத்தொடர்ந்து அமைச்சர் மரிய வில்சன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஒவ்வொரு முறையும் சமரச மையத்தில் மாற்றி மாற்றி முடிவை தெரிவித்துள்ளனர். சமரசத்தில் விருப்பம் இல்லை என்பதையும் தெளிவாக அவர்கள் தெரிவிக்கவில்லை" என வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வி. லட்சுமிநாராயணன், வழக்கில் சம்பந்தப்பட்டவருக்கு சமரசம் செய்ய விருப்பமில்லை என்றால், சமரசம் செய்வதில் எந்த பயனும் இல்லை. யாரையும் சமரசத்துக்கு செல்லுங்கள் என கட்டாயப்படுத்த முடியாது.

    எனவே அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணை, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவித்து, விசாரணையை வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஒத்திவைத்தார். மேலும், அமைச்சர் மரியவில்சனுக்கு எதிராக புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

    English Summary

    The case filed by Tamil Nadu Minister Marie Wilson, seeking to quash the case registered against her regarding an alleged assault, comes up for hearing at the Madras High Court today. High Court has ordered the complainant—her sister-in-law—to appear in court today.