சென்னை: தனது சகோதரர் தன் மீது தொடுத்துள்ள கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய கோரியும், புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரியும் அமைச்சர் மரிய வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து அமைச்சருக்கு நீதிமன்றம் விளக்கு அளித்திருக்கிறது.
ஏற்கெனவே இந்த வழக்கில், மரிய வில்சன் ஆஜராக வேண்டும் என்று புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இப்படி இருக்கையில் தற்போது உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
அமைச்சர் மரிய வில்சனுக்கும், அவரது அண்ணன் மரிய குலோத்துக்கும் நீண்ட நாட்களாக சொத்து பிரச்சனை நீடித்து வருகிறது. இப்படி இருக்கையில், கடந்த 2022ம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள அவரது அண்ணன் வீட்டில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக அமைச்சர் மரிய வில்சன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக புதுச்சேரி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஆனால், மரிய வில்சன் மீது எளிதில் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளில்தான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று கேட்டு.. தாக்குதலுக்கு உள்ளானவர்கள் நீதிமன்றத்தை அணுகி, வீடியோ ஆதாரத்தை சமர்ப்பித்தனர். இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வெளியாகி மரிய வில்சனுக்கு எதிராக திரும்பியது. பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து.. வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு மாற்றப்பட்டது. இதற்கு முன்னர் வரை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, மரிய வில்சன் தமிழக அமைச்சராக பொறுப்பேற்றதும் புதுச்சேரி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கில் பலமுறை மரிய வில்சன் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், பட்ஜெட் தாக்கல் பணிகள் இருப்பதால், வாய்தா கேட்டு ஆஜராகமல் தவிர்த்தார் மரிய வில்சன். இப்படி இருக்கையில் அவர் மீதான சார்ஜ் ஷீட் நகலை நேரில் வந்து பெற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், மரிய வில்சன் ஆஜராகததால் நீதிபதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இந்த பின்னணியில்தான் தற்போது மரிய வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார். தன் மீதான கொலை மிரட்டல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், புதுவை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சமரச மையத்தில் மனுதாரர்கள் ஆஜராக வேண்டும் என்றும், நாளை புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராக வேண்டியதில்லை என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.வழக்கின் பின்னணி
வீடியோ ஆதாரம்
ஆஜராகமல் தவிர்த்த அமைச்சர்
உயர்நீதிமன்றத்தில் முறையீடு