சென்னை: சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு தெரிவித்த நிலையில், அவருக்கு நோக்கி இளைஞர்கள் "மெரினா.. மெரினா" என்று முழக்கமிட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மெரினா கடற்கரையில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ராஜ்மோகன் முன்பாக இளைஞர்கள் முழக்கமிட்டு விரட்டியடித்துள்ளனர்.
நாடு முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொடங்கிய இந்தப் போராட்டம் பல்வேறு நகரங்களுக்கும் வேகமாக பரவியது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், சினிமா நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்தன.
அதேபோல் போராடி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகளுடன் மத்திய பாஜக அரசு சார்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று பிற்பகலில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதன் மூலமாக பாஜக அரசு மாணவர்களின் போராட்டத்திற்கு பணிந்துள்ளதாக நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். டெல்லி, கொல்கத்தா, சென்னை, மும்பையில் மாணவர்கள் கொண்டாட்டம் களைகட்டியது. சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்தில் மாணவர்கள் ஒரு வாரமாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். எந்தவித கட்சி சார்பும் இன்றி பல்வேறு தரப்பு இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். நாளுக்கு நாள் இந்தப் போராட்டம் வலுப்பெற்று வந்தது. இதனிடையே போராடும் இளைஞர்கள் மெரினாவில் கூட திட்டமிட்டதாக கூறி, மெரினா கடற்கரை மூடப்பட்டது. பொதுமக்கள் கூட தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இதனால் மிகப்பெரிய அளவில் மாற வேண்டிய போராட்டத்தை தவெக அரசு தடுப்பதாக இளைஞர்கள் கொந்தளித்து வந்தனர். இருந்தாலும் பாலன் இல்லத்திற்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட போராட்டம் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்ட சூழலில், அமைச்சர் ராஜ்மோகன் பாலன் இல்லம் வந்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அங்கிருந்த ஒட்டுமொத்த இளைஞர்களும், திடீரென "மெரினா.. மெரினா" என்று முழக்கமிட்டனர். மெரினா கடற்கரையை மூடவை கண்டித்து கோஷங்கள் எழுப்பி விரட்டியடித்தனர். ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்த போது, ஜனநாயகன் திரைப்படத்தை காண அமைச்சர்கள் சென்றது மிகப்பெரிய விவாதமாக மாறியது. இதனால் தவெக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது மாணவர்களின் கோபமாக பார்க்கப்படுகிறது.