ரெஜிஸ்டர் செய்தால் மட்டும் போதாது.. அக்னியை சுற்றி வந்தால் தான் திருமணம் செல்லும்.. குஜராத் ஐகோர்ட்

  • அகமதாபாத்: இந்து சட்டத்தின்படி பாரம்பரிய சடங்குகள், குறிப்பாக 'சப்தபதி' எனப்படும் அக்னியை வலம் வரும் ஏழு படிகள் சடங்கு முறைப்படி நடத்தப்படாத பட்சத்தில் அந்த திருமணம் செல்லாது என்று குஜராத் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேலும், திருமணத்தைப் பதிவு செய்வது மட்டும் ஒரு திருமணத்தைச் செல்லுபடியாகும் விஷயமாக மாற்றாது என்றும் இந்து சடங்குகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    Advertisement

    இந்து திருமணம் தொடர்பாகக் குஜராத் உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. கடந்த ஜூன் 23ம் தேதி நீதிபதிகள் இலேஷ் வோரா மற்றும் ஆர்.டி. வச்சானி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சரியான சடங்குகள் செய்யப்படாமல் பதிவு செய்யப்படும் திருமணங்கள் சட்டப்பூர்வமானவை அல்ல என்பதே குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பாகும்.

    Advertisement

    பின்னணி

    பிரிட்டன் நாட்டில் வசிக்கும் கௌஷல் சோனார் என்ற நபர், தனக்குத் தெரியாமல் தனக்கு நடந்ததாகக் கூறப்படும் ஒரு திருமணத்தைச் செல்லாததாக அறிவிக்கக் கோரி குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். குடும்ப நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்ததை அடுத்து, அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது பெற்றோரை அணுகி, தாங்கள் சட்டப்படி திருமணம் செய்து கொண்டதாகக் கூறி திருமணச் சான்றிதழைக் காட்டியபோதுதான் தனக்கு இந்த சம்பவமே தெரியவந்தது என்று சோனார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சுட்டிக்காட்டிய நீதிமன்றம்

    அவருடன் தான் ஒருபோதும் கணவன் மனைவியாக வாழவில்லை என்றும், எந்தவொரு இந்து திருமண சடங்குகளும் நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். மேலும், போலியான முறையில் தனது கையெழுத்தைப் பெற்று திருமணப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இரு தரப்பினருக்கும் இடையே எந்தவொரு திருமண சடங்குகளும் நடைபெறவில்லை என்பதையும், அவர்கள் கணவன் மனைவியாக இணைந்து வாழவில்லை என்பதையும் அந்த பெண்ணும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டியது.

    அப்படியிருக்கும்போது, அந்த நபரின் மனுவை குடும்ப நீதிமன்றம் நிராகரித்தது தவறு என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்து திருமண சட்டம் பிரிவு 7-ன் படி, ஒரு இந்து திருமணம் முழுமையடையவும் சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகவும் அக்னியை சுற்றி வருவது போன்ற பாரம்பரிய சடங்குகள் அவசியமாகும். சடங்குகள் இல்லை என்றால் இந்து திருமணம் நடந்ததாகக் கருதி முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

    Advertisement

    புனித சடங்கு

    திருமணத்தின் புனிதத்தன்மை மற்றும் சமூகப் பின்னணி குறித்தும் இந்த உத்தரவில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. இந்து பாரம்பரியத்தில் மனைவி என்பவர் கணவனின் பாதி உடலான அர்தாங்கினியாக மதிக்கப்படுகிறார் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்து சட்டத்தின் கீழ், திருமணம் என்பது ஒரு புனிதமான சடங்கு என்றும் இது ஒரு புதிய குடும்பத்தின் அடிப்படைத் தொடக்கமாக அமைகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    ஆடல் - பாடல் மட்டும் திருமணம் அல்ல

    குஜராத் நீதிமன்றம் மேலும், "திருமணம் என்பது வெறும் பாடல், நடனம், விருந்து அல்லது ஒரு வணிக பரிவர்த்தனை போன்றது அல்ல.. அது இரு நபர்களுக்கு இடையே வாழ்நாள் முழுவதும் நீடிக்கும், கண்ணியமான, பரஸ்பர ஒப்புதலுடன் கூடிய ஆரோக்கியமான இணைப்பை உருவாக்குகிறது. நமது கலாச்சாரத்தில் சடங்குகள் என்பவை ஆன்மிக ரீதியாக இரு நபர்களை இணைக்கும் வேலையைச் செய்கின்றன. எனவே, இன்றைய இளைஞர்கள் திருமணப் பந்தத்திற்குள் நுழைவதற்கு முன்பு அதன் புனிதத் தன்மையை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்" என்றும் குஜராத் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    English Summary

    Gujarat High Court has ruled that merely registering a Hindu marriage does not make it legally valid(இந்து திருமணம் தொடர்பாக குஜராத் நீதிமன்றம்): Gujarat High Court on Hindu Marriage validity.