மசாலா தோசைக்குள் எலி எப்படி போச்சு? வாந்தி வாந்தியா எடுத்த மும்பை கஸ்டமர்! அடுத்து அதுக்கு மேல் ஷாக்

  • சென்னை: ஓட்டலில் சாப்பிடும்போது சுவை எப்படி இருக்கிறது என்பதை மட்டும் பார்த்தால் போதாது.. சாப்பாடு தயாராகும் இடம் எந்த நிலையில் இருக்கிறது என்பதும் ரொம்ப முக்கியம்.. இல்லாவிட்டால், நம்முடைய சாப்பாட்டிலேயே நாம் நினைத்துப் பார்க்காத ஒன்று வந்து விழும் நிலையும் ஏற்படலாம். இதோ இப்போது மும்பையில் நடந்த சம்பவத்தை பாருங்கள், இதற்கு இணையவாசிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்..!!

    Advertisement

    மும்பை போரிவலி வெஸ்ட்டில், ரயில்வே ஸ்டேஷன் நிலையம் அருகே எல்.டி. ரோட்டில் கோயல் ஷாப்பிங் சென்டருக்கு எதிரே ராதாகிருஷ்ணா ஓட்டல் உள்ளது. இங்குதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அமித் திரிவேதி தனது 2 சகோதரர்கள் மற்றும் மகனுடன் இந்த ஓட்டலுக்கு சென்றிருக்கிறார்.. தென்னிந்திய உணவு சாப்பிடலாம் என்று நினைத்த இவர்கள், மைசூர் மசாலா தோசையை ஆர்டர் செய்துள்ளனர்.

    Advertisement

    மைசூர் மசால் தோசை

    தோசை வந்ததும் அமித்தின் சகோதரர் அதை சாப்பிட ஆரம்பித்துள்ளார். சில வாய் சாப்பிட்ட பிறகுதான் தோசைக்குள் சிறிய இறந்த எலி இருப்பதை பார்த்து அலறியிருக்கிறார்.. உடனடியாக அதிர்ச்சியில் வாந்தி எடுத்துள்ளார்.. சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இப்படியொரு காட்சி கண்ணில் பட்டதால் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து அமித் திரிவேதி போரிவலி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

    புகார் கொடுக்கப்பட்ட பிறகுதான் இந்த விஷயம் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கவனத்துக்கும் சென்றது. போரிவலி போலீஸ் நிலைய சீனியர் இன்ஸ்பெக்டர் புஷ்பலதா மண்டலே, புகார் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக கமிஷனர் துகாராம் முண்டேவும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி தந்துள்ளார்..

    Advertisement

    தோசைக்குள் எப்படி எலி

    இதையடுத்து, அதிகாரிகள் உடனடியாக ராதாகிருஷ்ணா ஓட்டலுக்குச் சென்று சோதனை நடத்தினார்கள்.. அப்போதுதான் தோசைக்குள் எலி இருந்ததாக கூறப்பட்ட சம்பவத்தைத் தாண்டி, ஓட்டலில் ஏராளமான சுகாதாரக் குறைபாடுகள் இருப்பதை பார்த்து அதிர்ந்தனர்..

    சாப்பாட்டின் மீது ஈக்கள் மொய்ததுக் கொண்டிருந்ததாம்.. உணவுப் பொருட்கள் தரையில் வைக்கப்பட்டிருந்ததாம்.. உணவு பொருட்களை வைத்திருக்கும் இடங்களும் சரியாக பராமரிக்கப்படாமல் அழுக்காக இருந்ததாக தெரிகிறது.

    அதிகாரிகள் கண்டிப்பு

    அதுமட்டுமல்லாமல், கழிவுநீர் செல்லும் அமைப்பு அடைத்துக் கிடந்ததும் சோதனையில் தெரியவந்துள்ளது. உணவு பாதுகாப்பு விதிகளின்படி இருக்க வேண்டிய சுகாதார நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    இந்த குறைபாடுகளைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணா ஓட்டலின் உணவு விற்பனை லைசென்ஸ் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.. ஓட்டலும் உடனடியாக மூடப்பட்டுள்ளது., இதனிடையே, தோசைக்குள் எலி இருந்ததாக கொடுக்கப்பட்ட புகார் தொடர்பான விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    பெரும்பாலும் தோசை மாவில் எலி தவறி விழுந்துவிடக்கூடும்.. இப்படியான சம்பவங்களும் நடந்துள்ளன. ஆனால், சுடச்சுட சுட்டு கொடுக்கும் மசாலா தோசைக்குள், எலி எப்படி போயிருக்கும்? என்பதுதான் அனைவரின் சந்தேகமாக உள்ளது...!!

    English Summary

    Masala Dosa Rat Found.. Mumbai Customer Vomits After Eating.. What Happened Next?