சென்னை: சென்னை மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை கிடைக்கிறதா? அரசு நிகழ்ச்சிகளுக்கு தங்களை அழைப்பதில்லை என்று கவுன்சிலர்கள் புகார் தெரிவித்த நிலையில், மேயர் பிரியாவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்... ரிப்பன் மாளிகையில் நடந்த மாதாந்திர மாமன்ற கூட்டத்தில் அப்படி என்னதான் நடந்தது?
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை முறையாக அழைப்பதில்லை என்ற புகார் எழுந்தது. அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர்.
கூட்டத்தில் பேசிய துணை மேயர் மகேஸ் குமார், சைதாப்பேட்டை தொகுதியில் புனரமைக்கப்பட்ட பூங்காவின் திறப்பு விழாவுக்கு சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே அழைக்கப்பட்டதாகவும், மண்டலக் குழுத் தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலருக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார். அதிகாரிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உடனே பல கவுன்சிலர்கள் எழுந்து, தங்கள் வார்டுகளிலும் இதே நிலைதான் இருப்பதாக சொன்னார்கள்.. அரசு நிகழ்ச்சிகளுக்கு தங்களை அழைப்பதில்லை என்றும், இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சமீரன் பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். கவுன்சிலர்களின் புகார்களைத் தொடர்ந்து பேசிய மேயர் பிரியா, "எனக்கும் இதே நிலைதான்.. முதல்வர் ரிப்பன் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது குறித்து தன்னிடம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.. ஆனால் முதல்வரின் கூட்டத்தை நான் புறக்கணிப்பதாக வெளியே செய்திகள் வருகின்றன. முதல்வர் வரும்போது அவர் எத்தனை மணிக்கு வருகிறார் என்று முன்கூட்டியே தெரிவிக்க வேண்டாமா? காலை முதல் இரவு வரை ரிப்பன் மாளிகையிலேயே என்னால் இருக்க முடியுமா? மாமன்ற உறுப்பினர்களைப் புறக்கணிக்குமாறு அதிகாரிகளுக்கு ஏதாவது அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதா? ஒவ்வொரு வார்டிலும் பொதுமக்களின் தேவைகளை அறிந்து, சம்பந்தப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு, பிற துறைகளுடன் தொடர்ந்து பேசி, மாமன்றத்தில் விவாதித்து திட்டங்களைச் செயல்படுத்த கவுன்சிலர்கள் முயற்சி செய்கிறார்கள்.. ஒரு திட்டத்தை செயல்படுத்துவதற்காகக் கவுன்சிலர்கள் ஒரு வருடம் வரை தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கொண்டுவந்த திட்டங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் திறந்து வைக்கிறார்கள். அந்த திட்டத்துக்காக உழைத்த கவுன்சிலரையே திறப்பு விழாவுக்கு அழைக்காதது எப்படி நியாயமாகும்? சட்டமன்ற உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதிகள்தான்.. கவுன்சிலர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான்.. அவர்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதிகாரிகள் அதிகாரத் தோரணையுடன் நடந்துகொள்கிறார்கள்.. அரசியலில் தலையிட வேண்டாம் என்று சொல்கிறார்கள்.. மூலதன நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த தகவல்களைக்கூட மாமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிப்பதில்லை.. கவுன்சிலர்கள் மக்களின் குறைகளை கேட்டு அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டு ஒரு வேலையை செய்தால் அதை எம்.எல்.ஏக்கள் வந்து திறந்து வைப்பதா? எம்.எல்.ஏக்களும் மக்கள் பிரதிநிதிகள்தான். நாங்களும் மக்கள் பிரதிநிதிகள்தான். மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க விருப்பமில்லையெனில் மாநகராட்சியை கலைத்து விடுங்கள். அதிகாரிகளே கூட்டத்தை நடத்தட்டும்" என்றார் ஆவேசமாக. இதையடுத்து, மேயர் மற்றும் கவுன்சிலர்களின் புகார்களுக்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர் சமீரன், "அரசு நிகழ்ச்சிகள் மற்றும் மாநகராட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் அழைக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை.. அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் முன்கூட்டியே அழைப்பு விடுக்க வேண்டும் என்று தெளிவான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் நகலை மன்றத்தில் சமர்ப்பிக்கிறேன். மழைநீர் வடிகால் மற்றும் மழை வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட கூடுதல் அலுவலர்களுக்கும் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. திடீர் ஆய்வுகளை தவிர, திட்டமிட்ட ஆய்வுகள் மற்றும் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெறும்போது சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.. மண்டலக் குழுத் தலைவர்கள், கவுன்சிலர்கள், மேயர், துணை மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். சில இடங்களில் மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் இருந்தால், மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் துணை மக்கள் தொடர்பு அலுவலர்களுடன் மீண்டும் கூட்டம் நடத்தி தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.. அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் ஒருங்கிணைத்தே பணியாற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. அதனால் யாரையும் தனியாக ஒதுக்கி வைக்க வேண்டும் என்று உத்தரவிடவில்லை" என்று விளக்கமளித்தார்.துணை மேயர் மகேஸ் குமார் புகார்
மேயர் பிரியா
மக்கள் பிரதிநிதிகள்தான்
மேயர் பதவியை எதிர்பார்க்கும் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக.. விஜய் முடிவு? கலக்கத்தில் தவெக!
அரசியல் தலையீடு
கமிஷனர் சமீரன் விளக்கம்
அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுக்க மாட்றாங்க.. நேரடியாக குற்றம்சாட்டிய மேயர் பிரியா!
யாரையும் புறக்கணிக்கல