சென்னை: மத்திய அரசு நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொள்கிறீர்களே, முதல்வர் விஜய் பெரம்பூர் வந்த போது எம்எல்ஏ அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன் என்ற கேள்விக்கு மேயர் பிரியா பதிலளித்துள்ளார்.
அவரிடம் செய்தியாளர்கள், மத்திய அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளீர்களே என கேட்டதற்கு பிரியா, "நான் எல்லா நிகழ்ச்சிகளிலும்தான் கலந்து கொள்கிறேனே்" என்றார்.
அதற்கு செய்தியாளர்கள், முதல்வர் கலந்து கொண்ட பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லையே என கேட்டதற்கு, நான் கிளம்புகிறேன் என சொல்லிவிட்டு காரில் ஏறினார். அப்போது மீண்டும் மீண்டும் செய்தியாளர்கள் கேட்டதை அடுத்து, அழைப்பில்லாமல் எப்படி முதல்வர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமுடியும்? என கேள்வி எழுப்பிவிட்டு காரில் விர்ரென ஏறி அமர்ந்து சென்றுவிட்டார். சென்னை கொளத்தூரில் மத்திய அரசின் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு விழாவில் மேயர் பிரியா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இந்த நிகழ்வில் வடசென்னை தொகுதி எம்பி கலாநிதி வீராசாமி, கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை மக்கள் இந்த மையத்திலேயே பெற முடியும் என தெரிவித்திருந்தனர். கடந்த மே 10 ஆம் தேதி முதல்வராக விஜய் பதவியேற்றார். அவர் பதவியேற்று 2 மாதங்களான நிலையில் அரசு அதிகாரிகள், தொழில்துறையினர், அரசியல்வாதிகள், சினிமா துறையினர் என மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறார்கள். ஆனால் சென்னை மேயராக உள்ள ஆர்.பிரியா, இதுவரை விஜய்யை மரியாதை நிமித்தமாக சந்திக்கவில்லை. சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு காலில் எலும்பு முறிவால் பாதிக்கப்பட்ட பிரியா, கடந்த மாதம் அலுவலக பணிகளை கவனித்தார். அப்போது கூட அவர் முதல்வர் விஜய்யை சந்திக்கவில்லை. மேலும் பதவியேற்பு விழாவுக்கு தனக்கு அழைப்பிதழ் வரவில்லை, அதனால் கலந்து கொள்ளவில்லை என்றும் பிரியா தெரிவித்திருந்தார். தற்போதைக்கு முதல்வர் விஜய்யை பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். கடந்த மாதம் பெரம்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மேயர் பிரியா கலந்து கொண்ட போது தவெகவை கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் பேசுகையில் தவெக ஆட்சிக்கு வந்து இத்தனை நாட்களாகியும் இதுவரை எந்த திட்டத்தையும் புதிதாக செய்யவில்லை. ஸ்டிக்கர் ஆட்சியும் சோஃபா ஆட்சியும்தான் தற்போது வரை நடந்து வருகிறது. ஆனால் தங்கள் தவறுகளை அவர்கள் ஒப்புக் கொள்ளாமல், திமுகதான் காரணம் என சொல்லி வருகிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பொதுக் கூட்டங்களில் திமுகவை விமர்சித்து வந்தனர். தற்போது முதல்வராக இருக்கும் விஜய், மேடைகளில் பேசிய போது திமுகவை தீய சக்தி, அந்த சக்தி, இந்த சக்தி என பேசினார். திருச்சியில் விஜய் பேசிய போது ஸ்கிரிப்ட் திடீரென மறந்துவிட்டது. உடனே அவர் பார்த்து படிக்கிறார். யாரோ எழுதி கொடுத்த ஸ்கிரிப்டை படிக்கிறீர்கள் சரி! அதை காரில் செல்லும் போதாவது படித்திருக்கலாமே! பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், அங்கு அந்த மக்களை சந்தித்து நன்றி தெரிவித்துவிட்டு, அவர்களுக்கு என்ன திட்டங்களை தவெக ஆட்சி செய்ய போகிறது என்பதை எடுத்துக் கூறுவதுதான் நல்ல தலைவருக்கு அழகு. ஆனால் ஸ்டாலினோ, தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நாளே தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது மக்கள் தன்னை தோற்கடித்த நிலையிலும் அது குறித்து மக்களிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. ஆவூன்னா முதல்வர் விஜய் விர்ச்சுவர் வாரியர்ஸ் என பேசி வருகிறார். நான் அவர்களை பார்த்து கேட்கிறேன், ஏம்ப்பா விர்ச்சுவர் வாரியர்ஸ்களா, திமுகவை விமர்சித்து கன்டென்ட் போடுகிறீர்களே! அது உண்மையா, பொய்யா என்பதை கூட பார்க்க மாட்டீர்களா! உங்களுக்கு மூளை இருக்கிறதா. இவ்வாறு பிரியா கடுமையாக விமர்சித்திருந்தார்.மேயர் பிரியா - சேகர் பாபு மீது வழக்குப்பதிவு.. தவெக அமைச்சருக்கு எதிராக போராடியதால் நடவடிக்கை